பலவந்தமாக காணாமல் போதலைத் தடுக்க சர்வதேசத்துடன் ஒப்பந்தம்! : ராஜித
பலவந்தமாக காணாமல் போகச் செய்யப்படுவதிலிருந்து சகல நபர்களையும் பாதுகாப்பதற்கான சர்வதேச சமவாயத்தில் கையொப்பமிடும் அமைச்சரைவப் பத்திரத்திற்கு, அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதாக அமைச்சர் ராஜித சேனாரத்ன குறிப்பிடுகின்றார்.
அமைச்சரைவை முடிவுகளை அறிவிக்கும் வாராந்த செய்தியாளர் சந்திப்பு இன்று (வியாழக்கிழமை) நாடாளுமன்றக் கட்டிடத்தொகுதியில் நடைபெற்ற போது, அவர் இவ்வாறு குறிப்பிட்டார். இது தொடர்பில் அவர் மேலும் குறிப்பிடுகையில்,
‘பலவந்தமாக காணாமல் போகச் செய்யப்படுவதிலிருந்து சகல நபர்களையும் பாதுகாப்பதற்கான சர்வதேச சமவாயத்தில் கையொப்பமிடுவதற்கும் அதை வலுவாக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதற்கான ஒப்பந்தத்தில் இதுவரையில் 94 நாடுகள் கையெழுத்திட்டுள்ளதுடன், 51 நாடுகள் அதனை நடைமுறைப்படுத்துகின்றன.
இந்தவகையில் நடைமுறையில் உள்ள நமது அரசாங்கம், மக்கள் ஆணையை ஏற்று தூரநோக்கில் செயற்படுவதுடன், மனித உரிமைகளைப் பாதுகாப்பதற்கும் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கும் முற்சிக்கின்றது.
இதற்காக பலவந்தமாக காணாமல் போகச் செய்யப்படுவதிலிருந்து சகல நபர்களையும் பாதுகாப்பதற்கான சர்வதேச சமவாயத்தில் கையொப்பமிடுவதற்கும், அதன் விதிமுறைகளை இந்த நாட்டில் நடைமுறைப்படுத்துவதற்கும் வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீரவினால் முன்வைக்கப்பட்ட அமைச்சரவை பத்திரத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.’ என்றும் கூறினார்.