ஐ.நா குழு பொய்யான குற்றச்சாட்டு – சீறுகிறார் பீரிஸ்
திருகோணமலைக் கடற்படைத் தளத்துக்குள் ஐ.நா குழுவினரை அனுமதிக்க சிறிலங்கா அரசாங்கம் எடுத்த முடிவை, சிறிலங்காவின் முன்னாள் வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் கண்டித்துள்ளார்.
அண்மையில் சிறிலங்கா வந்திருந்த காணாமற்போகச் செய்யப்பட்டோர் தொடர்பான ஐ.நா பணிக்குழுவின் நிபுணர்கள், திருகோணமலைக் கடற்படைத் தளத்தில் நுழைந்து, அங்கிருந்த இரகசியத் தடுப்பு முகாமைப் பார்வையிட்டு அதுபற்றிய தகவல்களை அம்பலப்படுத்தியிருந்தனர்.
இதுகுறித்து கொழும்பில் நேற்று செய்தியாளர்களிடம் கருத்து வெளியிட்ட, சிறிலங்காவின் முன்னாள் வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ்,
“உலகில் எந்தவொரு நாடுமே தமது கடற்படைத் தளத்துக்குள் நுழைவதற்கு வெளிநாட்டுக் குழுக்களை அனுமதிப்பதில்லை.
திருகோணமலைக் கடற்படைத் தளத்துக்குச் சென்ற தேடுதல் நடத்திய ஐ.நா குழுவினர், பொய்யான குற்றச்சாட்டைக் கூறியுள்ளனர்.
இதன் விளைவாக, 20 கடற்படை புலனாய்வு அதிகாரிகளை பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்ய சிறிலங்கா அரசாங்கம் தயாராகி வருகிறது.” என்று தெரிவித்துள்ளார்.