இரகசிய முகாம் குறித்து எமக்கு யாரும் சாட்சியமளிக்கவில்லை - பரணகம
திருகோணமலையில் இரகசிய தடுப்பு முகாம்கள் இருப்பதாக எமது ஆணைக்குழுவுக்கு சாட்சியமளித்த எவரும் கூறவில்லை.
அவ்வாறு எமக்கு யாராவது சாட்சியமளித்திருந்தால் நாங்களும் திருமலையில் உள்ளதாகக் கூறப்படும் இரகசிய முகாமுக்கு சென்று பார்த்திருப்போம் என்று காணாமல் போனோர் குறித்து விசாரணை நடத்தும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் தலைவர் மெக் ஷ்வல் பரணகம தெரிவித்தார்.
எமது ஆணைக்குழுவை நிறுத்திவிட்டு கோப்புக்களை புதிதாக அமைக்கப்படவுள்ள காணாமல் போனோர் அலுவலகத்திடம் ஒப்படைக்குமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கோரினால் அதனையேற்று கோப்புக்களை வழங்க தயாராக இருக்கின்றோம் என்றும் அவர் குறிப்பிட்டார்.
பரணகம ஆணைக்குழுவின் செயற்பாடுகளை உடனடியாக நிறுத்தவிட்டு அதன் கோப்புக்களை காணாமல் போனோர் தொடர்பில் அரசாங்கம் அமைக்கவுள்ள அலுவலகத்திடம் ஒப்படைக்கவேண்டும் என்று இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டிருந்த ஐக்கிய நாடுகளின் காணாமல் போனோர் குறித்த செயற்குழுவின் பிரதிநிதிகள் தெரிவித்தமை குறித்து விபரிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
மெக்ஷ்வல் பரணகம இந்த விடயம் குறித்து மேலும் குறிப்பிடுகையில்
நாங்கள் வடக்கு கிழக்கு மாகாணங்கள் முழுவதும் எமது ஆணைக்குழுவின் ஊடாக அமர்வுகளை நடத்தி பாதிக்கப்பட்ட மக்களிடம் சாட்சியங்களை பெற்றுக்கொண்டோம்.
அந்தவகையில் நாங்கள் சாட்சியங்களை மக்களிடம் பெற்றபோது சாட்சியமளித்தவர்கள் எவரும் திருகோணமலையில் இரகசிய தடுப்பு முகாம்கள் இருப்பதாக கூறவில்லை. அவ்வாறு எமக்கு யாராவது சாட்சியமளித்திருந்தால் நாங்களும் திருமலையில் உள்ளதாகக் கூறப்படும் இரகசிய முகாமுக்கு சென்று பார்த்திருப்போம். எங்களிடம் யாரும் சாட்சியமளித்திருந்தால் அதன்படி செய்திருப்போம். ஆனால் அமர்வுகளை நடத்தும்போது இவ்வாறு யாராவது சாட்சியமளித்திருந்தால் அது தொடர்பில் ஆராய்ந்திருப்போம்.
எமது ஆணைக்குழுவானது மிகவும் அர்ப்பணிப்புடனேயே இந்த காணாமல் போனோர் குறித்த விடயங்களை ஆராய்ந்து வருகின்றோம். அந்தவகையில் யாழ்ப்பாணத்திலும் அமர்வுகளை நடத்துகின்றோம். இது மிகவும் பரந்துபட்ட ஆணைக்குழுவாகும்.
யுத்தகாலத்தில் காணாமல்போனவர்கள் தொடர்பில் விசாரணை நடத்துவது என்பது இலகுவானதல்ல. எனினும் நாங்கள் அதனை மேற்கொண்டுவருகின்றோம். காணாமல் போனோர் உயிருடன் இருக்கின்றனரா? இறந்துவிட்டனரா? என்ன நடந்தது என்பது குறித்து ஆராய்வது இலகுவான விடயமல்ல. எனினும் நாங்கள் அதனை செய்துவருகின்றோம்.
இதேவேளை பரணகம ஆணைக்குழுவின் செயற்பாடுகளை உடனடியாக நிறுத்தவிட்டு அதன் கோப்புக்களை காணாமல் போனோர் தொடர்பில் அரசாங்கம் அமைக்கவுள்ள அலுவலகத்திடம் ஒப்படைக்கவேண்டும் என ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது. எம்மை சந்தித்தபோதும் ஐக்கிய நாடுகளின் காணாமல் போனோர் குறித்த குழு இந்த விடயம் தொடர்பாக குறிப்பிட்டது.
எமது ஆணைக்குழுவை நிறுத்திவிட்டு கோப்புக்களை புதிதாக அமைக்கப்படவுள்ள காணாமல் போனோர் அலுவலகத்திடம் ஒப்படைக்குமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கோரினால் அதனையேற்று கோப்புக்களை வழங்க தயாராக இருக்கின்றோம். இது ஜனாதிபதி ஆணைக்குழு என்பதால் ஜனாதிபதியே எமக்கு கூறவேண்டும். அவ்வாறு கூறியவுடன் எமது செயற்பாடுகளை முடிவுக்கு கொண்டுவர தயாராக இருக்கின்றோம். எமக்கு எந்த பிரச்சினையும் இல்லை. அரசாங்கம் கூறினால் இதனை செய்வதற்கு நாங்கள் தயாராக இருக்கின்றோம் என்றார்.
இதேவேளை இலங்கை வந்திருந்த ஐக்கிய நாடுகளின் காணாமல் போனோர் குறித்த செயற்குழுவின் பிரதிநிதிகள் பரணகம குழு குறித்து குறிப்பிடுகையில்
நாங்கள் பரணகம ஆணைக்குழுவை சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தினோம். இந்த ஆணைக்குழுவின் அறிக்கை அண்மையில் வெளியிடப்பட்டிருந்தது. இந்த ஆணைக்குழுவின் சுயாதீன தன்மை குறித்து கேள்வி எழுப்பப்பட்டுள்ளது. இந்த ஆணைக்குழுவின் செயற்பாடுகள் அரசாங்கத்தின் காணாமல் போனோர் குறித்து உருவாக்கவுள்ள அலுவலகம் தொடர்பில் சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. அதனால் இந்த ஆணைக்குழுவின் அனைத்து கோப்புக்கைளயும் அரசாங்கத்தினால் புதிதாக அமைக்கப்படவுள்ள காணாமல் போனோர் குறித்து அலுவலகத்திற்கு சமர்ப்பிக்குமாறு நாங்கள் மிகவும் வலிமையாக பரிந்துரை செய்கின்றோம் என்றனர்.