Breaking News

கைதிகள் நிபந்தனையின்றி விடுவிக்கும் வரை போராட்டம் தொடரும் - சித்தார்த்தன் எச்சரிக்கை

தமிழ் அரசியல் கைதிகள் நிபந்தனையின்றி விடுதலை செய்யப்படும் வரையில் நேற்றைய ஹர்த்தால் போன்று பல போராட்டங்கள் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்படும் யாழ்ப்பாண மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன் எச்சரித்துள்ளார்.

நவம்பர் மாதம் 7ம் திகதிக்கு முன்னதாக தமிழ் அரசியல் கைதிகள் விவகாரத்தில் தீர்க்கமான முடிவொன்று எடுக்கப்படும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உறுதியளித்த போதிலும், அந்த உறுதிமொழி மீறப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

அண்மையில் 32 கைதிகள் பிணையில் விடுதலை செய்ய எடுக்கப்பட்ட தீர்மானம் நீதிமன்ற ரீதியானது எனக் குறிப்பிட்ட அவர், அரசியல் ரீதியான தீர்மானம் ஒன்றையே தாம் கோரி நிற்பதாகவும் கூறினார்.

இந்த விவகாரம் குறித்து எதிர்வரும் 16ம் திகதி தீர்மானம் எடுக்கப்படும் என ஜனாதிபதி வட மாகாண முதலமைச்சரிடம் உறுதியளித்துள்ளதாகவும் அந்த உறுதிமொழி குறித்த தீர்மானம் வரும் வரையில் காத்திருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.