கிறிஸ்மஸ் தீவில் உள்ள தடுப்பு நிலையத்தில் பதற்றம்: தீ வைத்த கைதிகள்
அவுஸ்திரேலியாவின் கிறிஸ்மஸ் தீவில் அமைந்துள்ள தடுப்பு நிலையத்தில் பதற்றம் நிலவுவதாக தெரிவிக்கப்படுகின்றது. அங்கு தடுப்புக் காவலில் இருந்தவர்கள் நிலையத்திற்கு தீ மூட்டியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதன் காரணமாக மருத்துவ, கல்வி மற்றும் விளையாட்டு வசதிகள் சேதமடைந்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. கடந்த சனிக்கிழமை தடுப்பு நிலையத்தில் இருந்து தப்ப முற்பட்ட ஈரானைச் சேர்ந்த பாசல் செஜெனியின் மரணத்தில் ஏற்பட்ட சந்தேகம் காரணமாகவே தடுப்புக் காவலில் உள்ளவர்கள் இந்த அமைதியின்மையைத் தோற்றுவித்துள்ளதாக நம்பப்படுகின்றது.
இது தொடர்பில் அறிக்கை வெளியிட்டுள்ள அந்நாட்டு குடிவரவுத் திணைக்களம், பாதுகாப்புக் காரணங்கள் கருதி அங்கிருந்த பாதுகாப்பு படையினர் மீளஅழைக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளது.
குறித்த தடுப்பு நிலையத்தில் பாரியளவிலான கலவரம் இடம்பெற்றுவருவதாக வெளியான செய்தியை குறித்த அறிக்கை நிராகரித்துள்ளது. எனினும், அகதிகள் மற்றும் புகலிடக் கோரிக்கையாளர்கள் தங்கியுள்ள நிலையத்தில் பதற்றம் நிலவுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கிறிஸ்மஸ் தீவில் அமைந்துள்ள தடுப்பு நிலையத்தில் அவுஸ்திரேலியாவிலிருந்து நாடு கடத்தப்படவுள்ள நியூசிலாந்து நாட்டவர்களும் உள்ளமை குறிப்பிடத்தக்கது.