Breaking News

போதைப்பொருளை தடை செய்ய நான் தயாராகவே உள்ளேன் – ஜனாதிபதி

மதுபானம் மற்றும் சிகரெட் ஆகியவற்றை தடை செய்ய தான் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் தயார் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

எனினும், அது இலகுவான விடயம் கிடையாது என தெரிவித்துள்ள ஜனாதிபதி, அவ்வாறான நடவடிக்கைகள் முன்னெடுக்க முயற்சிக்கும் பட்சத்தில், அரசாங்கம் கவிழ்க்கப்படும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

போதைப்பொருள் தொடர்பான ஜனாதிபதி செயலணி கூட்டம், கேகாலை புனித ஜோசப் மகளிர் வித்தியாலயத்தில் இன்று நடைபெற்ற போதே அவர் இதனைக் கூறியுள்ளார்.

எந்தவொரு சந்தர்ப்பத்திலும் போதைப்பொருளை இல்லாதொழிக்க தான் தயார் என ஜனாதிபதி கூறியதை அடுத்து சபையிலிருந்தவர்கள் கரகோஷங்களை எழுப்பியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மதுபானம் மற்றும் சிகரெட் ஆகியவற்றினால் ஆண்டொன்றிற்கு 11,500 கோடி ரூபா வருமானத்தை அரசாங்கம் பெற்றுக் கொள்வதாக ஜனாதிபதி இதன்போது சுட்டிக்காட்டியுள்ளார்.

மதுபானங்களின் ஊடாக அரசாங்கம் ஆண்டொன்றிற்கு 6000 கோடி ரூபாயையும், சிகரெட்களினால் 5500 கோடி ரூபாயையும் அரசாங்கம் பெற்றுக் கொள்வதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

மதுபானம் மற்றும் சிகரெட்களுக்கு அடிமையாகியுள்ளவர்களுக்கு தெளிவூட்டல்களை வழங்கி, அவர்களை அதிலிருந்து மீட்டெடுக்க வேண்டும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கூறியுள்ளார்.