Breaking News

அரசியல் கைதிகளைப் புனர்வாழ்வுக்கு அனுப்ப கூட்டமைப்பு கோரவில்லை- சுமந்திரன்

தமிழ் அரசியல் கைதிகளை புனர்வாழ்வு அளித்து விடுவிப்பது தொடர்பான பரிந்துரையை இலங்கை அரசாங்கத்திடம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முன்வைக்கவில்லை என்று கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

அரசியல் கைதிகளை புனர்வாழ்வுக்கு அனுப்புவது தொடர்பாக எடுக்கப்பட்டுள்ள முடிவு குறித்து அவர் கருத்து வெளியிடுகையில், “தமிழ் அரசியல் கைதிகள் விடுதலையை வேண்டி சாகும் வரையிலான உண்ணாவிரதப் போராட்டத்தை மேற்கொண்ட போது, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோருடன் பேச்சு நடத்தியிருந்தோம்.

நீதி அமைச்சர் விஜேதாச ராஜபக்ச ஊடாக ஜனாதிபதியைத் தொடர்பு கொண்ட போது, தீபாவளிக்கு முன்னதாக 32பேரையும் அதற்கு பின்னர் இரண்டாம் கட்டமாக 30 பேரையும் பிணையில் விடுவிப்பதாக உறுதியளிக்கப்பட்டது. இந்த உறுதிமொழியை கூட்டமைப்பின் தலைவரும் நானும் இணைந்து சென்று கைதிகளிடத்தில் தெரிவித்து அவர்களின் உண்ணாவிரதப் போராட்டத்தை நிறுத்தியிருந்தோம்.

அதேபோன்று அதன் பின்னரும் ஜனாதிபதி, பிரதமரைச் சந்தித்து அந்த வாக்குறுதி தொடர்பாகவும் ஏனையோரின் விடுதலை குறித்தும் பேசியிருந்தோம்.இருப்பினும் அந்த நடவடிக்கைகளில் காலதாமதங்கள் நிகழ்ந்திருந்தன. அவ்வாறான நிலையில் மீண்டும் கைதிகள் தமது போராட்டத்தை ஆரம்பித்தனர்.

அவ்வாறான நிலையில் அவர்களின் விடுதலை தொடர்பாக பல்வேறு பேச்சுகளை நாம் நடத்தினோம். அரசியல் கைதிகளின் கோரிக்கைகளை எடுத்துரைத்தோம்.எம்முடன் நடத்தப்பட்ட பேச்சுக்களின் படி, நேற்று மேலும் 8 பேருக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது.நேற்றுக் காலை சிறைச்சாலைக்கு சென்று கைதிகளை பார்வையிட்டேன்.

அதன் பின்னர் பிரதமரின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க, அமைச்சர்கள் டி.எம்.சுவாமிநாதன், சாகல ரத்நாயக்க, சட்டமா அதிபர், சிறைச்சாலை ஆணையாளர் உள்ளிட்ட முக்கியஸ்தர்கள் பங்கெடுத்த கூட்டத்தில் கலந்து கொண்டேன். அவர்களின் விடுதலை தொடர்பாக வலியுறுத்தினேன்.

நாம் பொதுமன்னிப்பை கோரிய போதும் அரசாங்கம் நடவடிக்கை எடுக்கவில்லை. தற்போது தாமாகவே புனர்வாழ்வுக்கு விருப்பைத் தெரிவித்துள்ள போதும் அதற்கும் அரசாங்கம் எந்தவிதமான பதிலையும் வழங்காதுள்ளதென்று கைதிகள் குற்றச்சாட்டுக்களை முன்வைத்திருந்தனர். அதனையும் நான் கூட்டத்தில் தெரிவித்தேன்.

அவர்களில் 99பேர் புனர்வாழ்வுக்கான தமது விருப்புக்களை சிறைச்சாலை ஆணையாளரிடத்தில் தெரிவித்துள்ளனர். இவ்வாறான நிலையில் தான் அவர்களுக்கு புனர்வாழ்வளிக்கப்படுவது என்பது குறித்து அரசாங்கம் தீர்மானித்துள்ளது

தமிழ்த் தேசியக் கூட்டமைப்போ அல்லது நானோ அரசியல் கைதிகளுக்கு புனர்வாழ்வு அளிக்கப்பட வேண்டும் என எந்தவொரு சந்தர்ப்பத்திலும் வலியுறுத்தல்களையோ அல்லது பரிந்துரைகளையோ செய்தது கிடையாது. அத்துடன் கைதிகளையும் அவ்வாறு கோரவில்லை” என்று தெரிவித்துள்ளார்.