Breaking News

பாதாள அறைகளுடன் இலங்கையில் ரகசிய சித்ரவதை கூடம்: நேரில் கண்டுபிடித்த ஐ.நா. குழு அதிர்ச்சி தகவல்

இலங்கையில், விடுதலைப்புலிகளுடன் சண்டை நடந்த சமயத்திலும், சண்டைக்குப் பிறகும் ஏராளமான தமிழர்கள் காணாமல் போய்விட்டதாக புகார்கள் எழுந்தன.

இதுபற்றி விசாரிப்பதற்காக, பெர்னார்ட் துகைமே, தே-ஒங் பைக், ஏரியல் துலிட்ஸ்கி ஆகிய 3 பேர் அடங்கிய குழுவை ஐ.நா. அமைத்தது.

இக்குழுவினர், இலங்கைக்கு சென்றனர். அதிபர் சிறிசேனா, பிரதமர் ரனில் விக்ரமசிங்கே, வெளியுறவு மந்திரி மங்கள சமரவீரா மற்றும் உயர் அதிகாரிகளை சந்தித்துப் பேசினர்.

தலைநகர் கொழும்பு மட்டுமின்றி, கலே, தமிழர் பகுதிகளான யாழ்ப்பாணம், கிளிநொச்சி, மட்டக்களப்பு, மன்னார், முல்லைத்தீவு ஆகிய இடங்களுக்கும் சென்றனர்.

காணாமல் போன தமிழர்களின் நூற்றுக்கணக்கான உறவினர்களை சந்தித்துப் பேசினர். அவர்களின் 10 நாள் சுற்றுப்பயணம் நேற்றுடன் முடிவடைந்தது. இதையடுத்து, தாங்கள் நேரில் கண்டவற்றை குழுவில் இடம்பெற்றுள்ள ஏரியல் துலிட்ஸ்கி நேற்று தெரிவித்தார்.

அவர் கூறியதாவது,

இந்த பயணத்தின்போது, கிழக்கு மாகாணம் திரிகோணமலை மாவட்டத்தில் ஒரு கடற்படை தளத்துக்கு உள்ளே மறைவிடத்தில் சட்டவிரோதமாக ரகசிய சித்ரவதை கூடம் இயங்கியதை கண்டுபிடித்தோம். சண்டை முடிவடைந்த ஓராண்டுக்கு பிறகும், அதாவது 2010-ம் ஆண்டுவரை அந்த கூடம் இயங்கி உள்ளது.

அங்குள்ள பாதாள அறைகளில் அடைக்கப்பட்டு இருந்தவர்கள் சித்ரவதை செய்யப்பட்டதற்கான அடையாளங்கள், அங்குள்ள சுவர்களில் காணப்படுகின்றன.

இதை கண்டுபிடித்ததை முக்கிய கண்டுபிடிப்பாக கருதுகிறோம். இன்னும் இதுபோல் நிறைய இருக்கலாம் என்று தோன்றுகிறது. ஆகவே, இந்த கூடம் பற்றி இலங்கை அரசு முழுமையாக விசாரணை நடத்த வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

தொடர்பான செய்தி-

காணாமற்போனோர் தொடர்பில் நம்பகமான விசாரணை நடத்த வேண்டும் – ஐ.நா குழு கோரிக்கை