தீபாவளியை முன்னிட்டு அரசியல் கைதிகளை பொது மன்னிப்பில் விடுதலை செய்ய வேண்டும் - வடமாகாண முதலமைச்சர் கோரிக்கை
தீபாவளியை முன்னிட்டு இன நல்லிணக்கதை ஏற்படுத்தும் வகையில் தமிழ் அரசியல் கைதிகள் பொது மன்னிப்பு அடிப்படையில் விடுதலை
செய்யப்படவேண்டும் என வடமாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் கோரிக்கை விடுத்துள்ளார்.
விடயம் தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது,
நாட்டிலுள்ள சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசில் கைதிகளை விடுதலை செய்யாது அரசு பின்னிற்பதானது ஏதோவொரு அரசியல் காரணத்திற்கான நாடகமாக இருக்கலாம் என்றே எனக்கு தோன்றுகிறது.
ஏதாவதொரு விடயத்தை எங்களை கொண்டு செய்வதற்கு இவர்களை வைத்திருக்க வேண்டிய நிர்ப்பந்தம் தமக்குள்ளதென்று அவர்கள் நினைக்கிறார்களோ என நாங்கள் நினைக்கவேண்டியுள்ளது.
கைதிகள் விடுதலை தொடர்பில் எமக்கொரு கேள்வி எழுந்துள்ளது.
ஏனெனில் இவர்களுக்கு விடுதலையை பெற்றுத்தர வேண்டும் என ஜனாதிபதி, பிரதமர், சம்பந்தப்பட்ட அமைச்சர்கள் மற்றும் அற்றோனி ஜெனரலிடம் கோரிக்கைவிடுத்திருந்தோம்.
அச்சமயத்தில் கைதிகள் விடுதலை தொடர்பாக சுமுகமான மகிழ்ச்சியான பதிலை கடந்த 7ஆம் திகதிக்கு முன்னர் தருவதாக கூறியிருந்தார்கள். ஆனால் கூறியது போன்று தற்போது நடைபெறவில்லை.
ஆகவே, இவர்கள் எவ்வாறான நடவடிக்கையை எடுக்கப் போகிறார்கள் என்பது மயக்கமாகவே உள்ளது. அத்துடன் எதற்காக அரசு இவ்வளவு தாமதம் என்றும் எமக்கு புரியவில்லை. இனரீதியான காரணத்திற்காகவா அல்லது வேறு ஏதாவது காரணமாகவா இந்த தாமதம் என்று எனக்குத் தெரியவில்லை.
இவ் விடயத்தில் சட்டரீதியான காரணங்கள் இருக்கின்றன என்றால் இத்தனை வருடங்களாக வழக்கொன்றும் பதியாமல் இருக்கும் இவர்களுக்கு எப்போதோ பிணை அளித்திருக்கவேண்டும். அவ்வாறு செய்யாது விட்டுவிட்டு தற்போது பிணை அளிப்பதாக கூறுவதை நாங்கள் ஏற்றுக்கொள்ள முடியாது. ஏனெனில் இதுவரை வழக்குத் தொடர முடியாத ஒருவருக்கு இனி எவ்வாறு வழக்குத் தொடரப்போகிறார்கள்.
அத்துடன் அத்தகைய வழக்கிற்கு சாட்சியங்கள் இப்போது இருக்குமா என்பது கேள்விக்குறியாகும்.
இந்நிலையில் இப்படிப்பட்டவர்களை பொது மன்னிப்பில் விடுவதில் எந்தவிதமான சிக்கலும் இருக்கப்போவதில்லை. சிலருக்கு எதிராக வழக்குகள் பதியப்பட்டுள்ளதாக கூறுகிறார்கள். அப்படியாயின் எதற்காக வீண் தாமதம். அவ் வழக்குகளை விரைவாக முடிப்பதற்கு நடவடிக்கை எடுக்கலாம்.
இவ்விடயத்தில் நாம் ஒன்றை நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும். அதாவது அரசியல் கைதிகள் எனும்போது ஜே.வி.பி.யினருக்கு எதிராக பலவிதமான குறிப்பாக தமிழ் இளைஞர், யுவதிகளுக்கு இருப்பதைவிடவும் மேலான குற்றச்சாட்டுகள் அவர்கள் மீதும் இருந்ததாக கருதுகிறேன்.
அப்படி இருந்தும் அவர்களுக்கு பொது மன்னிப்பை இலங்கை அரசாங்கம் வழங்கியிருந்தது. அதேபோல சுமார் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விடுதலைப் புலிகள் பொது மன்னிப்பு அளித்து விடுதலை செய்யப்பட்டுள்ளார்கள்.
ஆகவே, இவ்வாறெல்லாம் நாட்டில் இருக்கும்போது வெறுமனே 248 தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்வதில் தற்போதைய அரசாங்கம் எதற்காக பின்நிற்கிறது.
இது எமக்கு பலவிதமான எண்ணங்களையும் கருத்துக்களையும் உண்டாக்குகின்றது. எது எவ்வாறாக இருந்தாலும் அவர்கள் குற்றம் செய்தார்களா இல்லையா என்பதற்கு அப்பால் அவர்கள் நீண்டகாலம் சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்கள்.
இதனால் அவர் களது வயதும் அதிகமாகிவிட்டது. அத் துடன் அவர்களது குடும்பங்கள் பல் வேறுபட்ட துன்பங்களை சந்தித்து வரு கின்றன.
எனவே தீபாவளியை முன்னிட்டு இன நல்லிணக்கதை ஏற்படுத்தும் வகை யில் அவர்களுக்கு பொது மன்னிப்பு வழங்கி விடுதலை செய்யப்பட வேண்டும் என நான் கருதுகிறேன் என்றார்.