நானும் ஒரு அகதி - மாவை கவலை
இருபத்தைந்து ஆண்டுகளுக்கும் மேலாக எனது சொந்த நிலம் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. எனவே நானும் சொந்த நாட்டிலேயே அகதியாகவே வாழ்ந்துவருகிறேன் என பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா தெரிவித்தார்.
ஆட்சிமாற்றத்தின் பின்னர் இனப்பிரச்சினைக்கான தீர்வு விரைவில் சாத்தியமாகும் என எதிர்பார்க்கிறோம். இந்நிலையில் இராணுவம் ஆக்கிரமித்துள்ள தமிழ் மக்களின் காணிகள் விடுவிக்கப்படவேண்டும் என அவர் மேலும் தெரிவித்தார்.
கோண்டாவில் இந்துக் கல்லூரியின் வருடாந்தப் பரிசளிப்பு விழாவில் பிரதம விருந்தினராகக் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் அங்கு மேலும் உரையாற்றியதாவது, எதிர்கால சந்ததியினரான இன்றைய மாணவர்களின் கல்விவளர்ச்சியில் புலம் பெயர்ந்த நாடுகளில் வாழ்கின்ற எம்மவர்கள் பெரும் கரிசனை காட்டிவருகின்றனர். அவர்கள் வியர்வை சிந்தி உழைத்த பணத்தினை எமது பிரதேசங்களை வளப்படுத்தும் வகையில் முதலீடுகளைச் செய்து உற்பத்தி முயற்சிகளை ஆரம்பிப்பதற்கும் தமிழ் இளைஞர், யுவதிகளுக்கு வேலைவாய்ப்பு வழங்குவதற்கும் தயாராகி வருகின்றனர்.
ஆட்சிமாற்றத்தின் பின்னர் இத்தகைய ஆர்வமுள்ளவர்களுக்கு இரட்டைப் பிரஜா உரிமை வழங்கி அவர்கள் எமது பிரதேசத்தில் முதலீடு செய்வதை ஊக்குவிக்குமாறு ஜனாதிபதியுடனும் பிரதமருடனும் பேசியுள்ளோம்.
பாடசாலைப் பிள்ளைகளுக்கு ஊட்டச் சத்து அவசியம். எங்கள் பிரதேசத்தில் உள்ள பாடசாலைகள் பலவற்றில் ஊட்டச் சத்து குறைவான மாணவர்கள் இனங்காணப்பட்டுள்ளனர். 30 வருட யுத்தத்தினால் எமது பிரதேசத்து தொழில்துறை நலிவடைந்து வேலை வாய்ப்புக்கள் அருகியுள்ளன. இதனால் குடும்ப பொருளாதார நிலை கீழ்மட்டத்தில் உள்ள பிள்ளைகள் ஊட்டச் சத்துக்குறைந்தவர்களாக உள்ளனர்.
இக் குறைபாட்டை நிவர்த்திசெய்வதற்கு தமிழர் பிரதேச பொருளாதார வளம் கட்டி எழுப்பப்படவேண்டும். ஏற்கனவே நல்ல முறையில் இயங்கிவந்த காங்கேசன்துறை சீமெந்துத் தொழிற்சாலை, பரந்தன் இரசாயனத் தொழிற்சாலை, வாழைச்சேனை காகித ஆலை போன்றவற்றை மீள ஆரம்பிக்குமாறு அரசாங்கத்திடம் வலியுறுத்தியுள்ளோம்.
இருபத்தைந்து வருடங்களுக்கு மேலாக எனது சொந்த நிலமும் இராணுவ ஆக்கிரமிப்புக்குள் அகப்பட்டுக் காணப்படுகின்றது. எனவே நானும் அகதியாகவே உள்ளேன். எனது சொந்தக் காணிக்குச் செல்லவேண்டும் என்ற ஏக்கம் என்னிடத்தில் இருக்கின்றது. என்னைப்போன்றே பலர் தமது சொந்தக் காணிகள் விடுவிக்கப்படவேண்டும் என ஏங்கிக்கொண்டிருக்கிறார்கள். எனவே புதிய அரசு விரைவில் இராணு ஆக்கிரமிப்புக்குள் உள்ள காணிகளை விடுவிக்க நடவடிக்கை எடுக்கவேண்டும்.
எமது ஆசிரியர்கள் தங்களை முழுமையாக அர்ப்பணித்து எமக்குக் கல்வி போதித்தார்கள். எனக்கு உள்நாட்டில் உயர்கல்விக்கான உரிமை மறுக்கப்பட்டது. நான் சிறையில் இருந்த காலத்தில் இந்தியப் பிரதமர் ஜவர்கலால் நேரு இந்திராகாந்திக்கு எழுதிய கடிதங்களைப் படித்திருந்தேன்.
எத்தகைய இக்கட்டான சூழ்நிலைகளிலும் மாணவர்கள் நன்றாகக் கற்கவேண்டும். நூலகங்களுக்குச் சென்று அறிவு நூல்களை வாசிக்க வேண்டும். ஆசிரியர்கள் அர்ப்பணிப்புடன் மாணவர்களுக்கு கல்வி போதிக்கவேண்டும். சிற்பியைப் போன்று எதிர்கால சமூகத்தைச் செதுக்கும் பாரிய பணியினை மேற்கொள்ளும் ஆசிரியர்களின் துன்பங்கள் போக்கப்படவேண்டும். அவர்களுக்குரிய பதவி உயர்வுகள் உரிய காலத்தில் வழங்கப்படவேண்டும் என்றார்.
இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினர்களாக யாழ். கல்வி வலய கல்வி நிர்வாக பிரதிக் கல்விப் பணிப்பாளர் கோ. வரதராஜ மூர்த்தி, கொழும்புத்துறை இந்து மகாவித்தி-யா-லய அதிபர் க.தவகீஸ்வரன் மற்றும் கௌரவ விருந்தினர் பழைய மாணவர் சங்க செயலாளர் த.ஞானகிரி உட்பட மற்றும் பலர் உரை நிகழ்த்தினர்.