ஆயுதக்கப்பல் விவகாரத்தில் ஆதாரங்கள் நிரூபிக்கப்பட்டால் மஹிந்த, கோத்தபாய தண்டிக்கப்படநேரிடும்
எவன்கார்ட் மிதக்கும் ஆயுதக் கப்பல் விவகாரத்தில் அரசாங்கத்தின் போக்கு கண்டிக்கத்தக்கது. இந்த விவகாரத்தில் மிகப்பெரிய மோசடிகள் இடம்பெற்றும் ஊழலை மூடிமறைத்து குற்றவாளிகளை காப்பாற்ற முயற்சிப்பதாக அமைச்சர் சம்பிக்க ரணவக்க தெரிவித்தார். ஆதாரங்கள் நிரூபிக்கப்பட்டால் மஹிந்த, கோத்தபாய ராஜபக்ஷ ஆகியோர் தண்டிக்கப்பட நேரிடும் எனவும் அவர் குறிப்பிட்டார்.
எவன்கார்ட் மோசடிகள் தொடர்பில் அமைச்சர்களான விஜயதாச ராஜபக்ஷ மற்றும் திலக் மாரப்பன ஆகியோர் தெரிவித்துள்ள கருத்துக்கள் அரசாங்கத்தினுள் குழப்பங்களை ஏற்படுத்தியுள்ள நிலையில் இது தொடர்பில் ஊடகம் ஒன்றுக்கு கருத்து தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். மேலும் கூறுகையில்,
இந்த விவகாரத்தில் மிகப்பெரிய மோசடிகள் நடைபெற்றுள்ளன என்பது ஆரம்பத்தில் இருந்தே முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டாகும். புதிய அரசாங்கத்தை அமைத்த சந்தர்ப்பத்தில் பிரதானமாக இந்த எவன்கார்ட் விவகாரமே அனைவராலும் அதிகம் பேசப்பட்டது. அப்போது இந்த குற்றச்சாட்டுகள் தொடர்பில் ஆதாரங்கள் இருப்பதாகவும், இந்த ஆயுதக் கப்பல் விடயத்தில் பாரிய ஊழல் நடந்துள்ளதாகவும் குறிப்பிட்டனர். அதேபோல் இந்த நிறுவனம் தேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலான வகையில் சர்வதேச நபர்களுக்கு ஆயுத பயிற்சி வழங்கியுள்ளதாகவும் பாதுகாப்பு தரப்பே குற்றம் சுமத்தியுள்ளது.
அதேபோல் முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவும் இந்த விடயத்தில் பல உண்மைகளை வெளிப்படுத்தியுள்ளார்.நானும் அமைச்சர் ராஜிதவும் அமைச்சரவை கூட்டத்திலும் பல தடவைகள் இந்த விவகாரம் தொடர்பில் ஜனாதிபதி மற்றும் பிரதமரிடம் தெரிவித்துள்ளோம். அதேபோல் அமைச்சரவையில் இந்த விவகாரம் தொடர்பில் முழுமையான விசாரணைகளை முன்னெடுப்பதாகவே தீர்மானம் எடுக்கப்பட்டது.
ஆனால் பாராளுமன்றத்தில் அமைச்சர்களான விஜயதாச மற்றும் திலக் மாரப்பன ஆகியோர் முன்வைத்த கருத்துக்கள் அமைச்சரவை தீர்மானத்திற்கு முற்றிலும் முரண்பட்டதாகும். இந்த ஊழல் மோசடிகள் தொடர்பில் அமைச்சர்களின் கருத்துக்களை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது. இந்த விவகாரத்தில் முழுமையான விசாரணைகளை மேற்கொண்டால் இறுதியில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவும் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக் ஷவுமே குற்றவாளிகளாக காணப்படுவார்கள். ஆகவே அவர்களை காப்பாற்றவேண்டும் என்ற ஒரு எண்ணத்தில் இந்த ஊழல் மூடிமறைக்கப்பட்டு வருகின்றது. மக்கள் இந்த அரசாங்கத்தின் மீது முழு நம்பிக்கையும் வைத்துள்ளனர். அந்த நம்பிக்கையை சிதைக்கும் வகையில் எவரும் நடந்துகொள்ளக் கூடாது.
எவன்கார்ட் விவகாரத்தில் பாரதூரமான ஊழல் நடைபெற்றுள்ளது. ஆகவே இது தொடர்பில் நேர்மையான வகையில் ஒரு விசாரணையை முன்னெடுக்க வேண்டும். அதேபோல் சட்டமா அதிபர் திணைக்களத்தின் கருத்துகளும் குழப்பமானதாகவே அமைந்துள்ளன. ஆரம்பத்தில் குற்றம் நடந்துள்ளதாக கூறியவர்கள் இப்போது மாற்றுக் கருத்தை முன்வைக்கின்றனர். ஒரு சிலர் இந்த விவகாரத்தில் வழக்கு தொடர முடியும் என குறிப்பிடுகின்றனர். ஆனால் இன்னொரு தரப்பினர் அவ்வாறு வழக்கு எதையும் தொடரமுடியாது என கூறுகின்றனர். ஆகவே இந்த விவகாரத்தின் பின்னணியில் மறைந்துள்ள உண்மைகளை கண்டறியும் வரையில் நான் போராடுவேன் எனக் குறிப்பிட்டார்.