அரசியல் கைதிகள் விடுதலை! சம்பந்தனுக்கு பகிரங்க கடிதம்
அரசியல் கைதிகளின் விடுதலை குறித்து தமிழ் மக்களுக்கும், சர்வதேச சமூகத்திற்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தமது நிலைப்பாட்டை அறிவிக்க வேண்டும் என கடிதம் மூலம் கோரப்பட்டுள்ளது.
தமிழ் சிறைக் கைதிகள், தமது பெற்றோர் ஊடாக இந்த கடிதத்தை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும், எதிர்க்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தனுக்கு அனுப்பிவைத்துள்ளனர்.
தமது விடுதலைக் கோரி கடந்த மாதம் தமிழ் அரசியல் கைதிகள் உண்ணாப் போராட்டமொன்றை ஆரம்பித்தனர்.எனினும், அரசாங்கத்தினாலும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினாலும் வழங்கப்பட்ட வாக்குறுதியை அடுத்து அவர்கள் தமது போராட்டத்தை தற்காலிகமாக கைவிட்டனர்.
இந்த நிலையில், தமது விடுதலையை வலியுறுத்தி தமிழ்க் கைதிகள் தமது உண்ணாப் போராட்டத்தை நேற்று மீண்டும் ஆரம்பித்துள்ளனர். தமிழ் அரசியல் கைதிகள் விவகாரத்தில் அரசாங்கம், தமிழ்க் கூட்டமைப்பு, சட்டமா அதிபர் ஆகிய தரப்புக்களின் நிலைப்பாடுகள் ஒன்றுக்கொன்று முரணமாக இருப்பதாக தமிழ் அரசியல் கைதிகள் சார்பாக அனுப்பப்பட்டுள்ள அந்தக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதனால் தாம் விடுவிக்கப்படுவோம் என்ற அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட வாக்குறுதியில் தமக்கு தற்போது நம்பிக்கை இல்லை என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதனால் தமிழ் மக்களுக்கும், சர்வதேசத்திற்கும் தமிழ்க் கைதிகளின் விடுதலை குறித்த நிலைப்பாட்டை எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் தெளிவாக அறிவிக்க வேண்டும் என்றும் அந்தக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஜனாதிபதி ஊடாக தமக்கு பொதுமன்னிப்பு வழங்கப்பட வேண்டும் என தமிழ்க் கைதிகள் கோரியிருந்தனர். எனினும், கைதிகள் பிணையில் விடுவிக்கப்படுவர் என அரசாங்கம் அறிவித்திருந்தது. இந்த நிலையில், இன்று 09ஆம் திகதி 32 கைதிகளுக்கு பிணை வழங்கப்படும் என நீதியமைச்சர் அறிவித்திருந்தார்.
எனினும், இன்று காலை வரை பிணை வழங்கப்படும் கைதிகளின் விபரங்களோ, கைதிகளை நீதிமன்றில் முன்னிலைப்படுத்துவதற்கான எவ்வித ஆவணங்களோ சிறைச்சாலை ஆணையாளருக்கு அனுப்பிவைக்கப்படவில்லை என்றும் தெரியவருகிறது.இதற்கமைய அரசியல் கைதிகளின் விவகாரம் தொடர்ந்து இழுபறி நிலையிலேயே உள்ளதாக கைதிகளின் பெற்றோர் கவலையடைந்துள்ளனர்.