அதிகாரிகளைக் காட்டிக்கொடுக்க முடியாது! விஜயதாஸ
சட்டமா அதிபர் திணைக்கள அதிகாரிகளைக் காட்டிக்கொடுக்க முடியாது எனவும், அவர்களைப் பாதுகாக்க வேண்டும் எனவும் நீதியமைச்சர் விஜயதாஸ ராஜபக்ச தெரிவித்துள்ளார். அவன்கார்ட் நிறுவன விசாரணைகள் குறித்து கருத்து வெளியிட்டபோதே அவர் இதனைத் தெரிவித்தார்.
அத்துடன், வெறுமனே கூச்சலிடுபவர்களுக்கு செவிசாய்த்து தான் பதவி விலக முடியாது எனவும் அவர் தெரிவித்தார்.
'இது நாங்கள் உருவாக்கிய அரசாங்கம். இந்த அரசாங்கத்தை நாம் பாதுகாக்க வேண்டும். கொலையாளிகளும், கப்பம் பெறுவோரும் விடுக்கும் சவால்களுக்கு நாம் செவிசாய்க்க முடியாது. எம்மை அரசாங்கத்தில் இருந்து விலகுமாறு அவர்கள் கூறுகின்றனர். என்னை பதவி விலகக் சொல்ல அவர்கள் யார்? என்னை தொடர்ந்து பதவியில் நீடிக்குமாறே அவர்கள் வலியுறுத்த வேண்டும். தற்போது குரல்கொடுப்பவர்கள் மகிந்த ஆட்சிக்காலத்தில் எங்கு சென்றிருந்தனர் என்பது குறித்து நான் கேட்க விரும்புகிறேன்' என்று அவர் கேள்வியெழுப்பினார்.
''ஜனாதிபதியும், பிரதமரும் உண்மை நிலையை அறிந்துள்ளனர். அவ்வாறிருக்க வெளியில் உள்ளவர்களின் கூச்சலுக்காக நான் பதவி விலகுமளவிற்கு முட்டாள் அல்ல. அவன்கார்ட் நிறுவன விசாரணையின் உண்மை நிலை குறித்தே நான் கருத்து வெளியிட்டேன். சட்டமா அதிபர் திணைக்கள அதிகாரங்களை நாம் காத்துக்கொள்ள வேண்டும். அவர்கள் காட்டிக்கொடுக்க முடியாது'' என்றும் அவர் தெரிவித்தார்.