Breaking News

அரசியல் கைதிகளுக்கான புனர்வாழ்வுக் காலத்தை நீதிமன்றமே தீர்மானிக்கும்

சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளுக்கான புனர்வாழ்வு காலத்தை நீதிமன்றமே தீர்மானிக்கும் என்று புனர்வாழ்வு ஆணையாளர் மேஜர் ஜெனரல் ஜனக ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டிருந்த அரசியல் கைதிகளில் ஒரு பகுதியினர், தம்மை புனர்வாழ்வுக்கு அனுப்ப அரசாங்கத்திடம் கோரியிருந்தனர்.

இதற்கமைய, முதற்கட்டமாக 85 அரசியல் கைதிகள், அடுத்த 10 நாட்களுக்குள் புனர்வாழ்வுக்கு அனுப்பப்படவுள்ளதாக  அரசாங்கம் உறுதியளித்துள்ளது. இதுதொடர்பாக கருத்து வெளியிட்டுள்ள,  புனர்வாழ்வு ஆணையாளர் மேஜர் ஜெனரல் ஜனக ரத்நாயக்க,

“அரசியல் கைதிகளின் புனர்வாழ்வு தொடர்பாக, நீதிமன்றமே தீர்மானங்களை எடுக்கும். நீதிமன்ற உத்தரவுக்கு அமையவே புனர்வாழ்வு பெறுபவர்களின் பெயர் பட்டியல் தயாரிக்கப்படும். பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு ஏற்கனவே இவர்கள் சிறையில் கழித்திருப்பதால், அவர்களுக்கான புனர்வாழ்வுக் காலம் உள்ளிட்ட விடயங்களை நீதிமன்றமே தீர்மானிக்கும்.

சாதாரணமாக ஒரு ஆண்டு காலம் புனர்வாழ்வு வழங்கப்படும். வவுனியா பூந்தோட்டம் புனர்வாழ்வு நிலையத்திலேயே புனர்வாழ்வு வழங்கப்படுகிறது. இங்கு தற்போது, 1 பெண் உள்ளிட்ட 51 பேருக்கு புனர்வாழ்வு அளிக்கப்படுகிறது.

சாதாரணமாக, ஆறு மாதங்கள் புனர்வாழ்வும், எஞ்சிய ஆறு மாதங்கள் தொழில்சார் பயிற்சிகளும் வழங்கப்படும். எனினும், இவர்களுக்கு எவ்வாறான புனர்வாழ்வு வழங்கப்பட வேண்டும் என்பதை நீதிமன்றமே தீர்மானிக்கும்” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.