பொறுப்புக்கூறல் விவகாரம் குறித்து சமந்தா பவருடன் விஜேதாச பேச்சு
திறந்த அரசுகளின் கூட்டமைப்பில்,இலங்கை இணைந்து கொண்டுள்ளமை, இன்னும் கூடுதலான பொறுப்புக்கூறலை நோக்கிய அதன் இன்னொரு அடி என்று தெரிவித்துள்ளார் ஐ.நாவுக்கான அமெரிக்கத் தூதுவர் சமந்தா பவர்.
இலங்கையின் நீதியமைச்சர் விஜேதாச ராஜபக்சவை கடந்த மாதம் 29ஆம் நாள் சந்தித்துப் பேச்சு நடத்திய போதே அவர் இவ்வாறு கூறியிருக்கிறார்.மெக்சிகோவில் நடைபெற்ற திறந்த அரசுகளின் கூட்டமைப்பின் பூகோள மாநாட்டின் பக்க நிகிழ்வாக இந்தச் சந்திப்பு இடம்பெற்றுள்ளது.
இந்த மாநாட்டில், இலங்கையும் திறந்த அரசுகளின் கூட்டமைப்பின் உறுப்பு நாடாக இணைந்து கொள்வதாக, நீதியமைச்சர் விஜேதாச ராஜபக்ச அறிவித்திருந்தார்.இந்தக் கூட்டமைப்பில் இலங்கை இணைந்து கொண்டதை, விஜேதாச ராஜபக்சவுடனான சந்திப்பின் போது சமந்தா பவர் வரவேற்றுள்ளார்.
அதேவேளை, இந்தச் சந்திப்பின் போது, பொறுப்பக்கூறல் தொடர்பான இலங்கையின் நகர்வுகள் தொடர்பாக சமந்தா பவரும், விஜேதாச ராஜபக்சவும் கலந்துரையாடியுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்தப் பேச்சுக்களில் இலங்கையின் பிரதி வெளிவிவகார அமைச்சர் ஹர்ஷ டி சில்வாவும், அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தில் ஜனநாயகம், மனித உரிமைகள் மற்றும் தொழிலாளர் விவகாரங்களுக்கான உதவிச் செயலர் ரொம் மாலினோவ்ஸ்கியும் கலந்து கொண்டனர்.