Breaking News

இராணுவ புலனாய்வு பிரிவினரே வெள்ளை வானில் கடத்தினர் – கோத்தபாய

இராணுவ புலனாய்வு பிரிவினரே மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கத்தின் காலத்தில் வெள்ளை வான்களை பயன்படுத்தி ஆட்கடத்தலிலும் காணாமல் போக செய்ததிலும் ஈடுபட்டதாக முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

வெள்ளை வான்களை பயன்படுத்தி ஆட்களை கடத்திச் சென்ற சம்பவங்கள் குறித்து எழுப்பட்ட கேள்விக்கு பதிலளித்துள்ள கோத்தபாய, புலனாய்வுப் பிரிவினரின் செயற்பாடு குறித்து தானே கேட்கிறீர்கள்?. 88ம் 89ம் ஆண்டுகளில் கறுப்பு வான்களை பயன்படுத்தியா கடத்தினர் என கேட்டுள்ளார்.

குற்றவாளிகளே வெள்ளை வான்களை பயன்படுத்தி கடத்திச் செல்லப்பட்டனர் எனவும் கோத்தபாய ராஜபக்ஷ குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

விடுதலைப் புலிகள், குற்றவாளிகள் மற்றும் பாதாள உலக உறுப்பினர்களை பிடிக்க புலனாய்வுப் பிரிவினர் பயன்படுத்தப்பட்ட வானையே வெள்ளை வான் என்கின்றனர்.

இதற்கு முன்னர் புலனாய்வுப் பிரிவினர் இவ்வாறு செயற்படவில்லையா?. ஜே.வி.பியின் காலத்தில் கறுப்பு வான்களிலா இளைஞர், யுவதிகள் கடத்தப்பட்டனர்?. இதனை அனைவரும் மறந்து விட்டனர்.

எவர் மீதாவது சேறுபூச வேண்டுமாயின் எதனையாவது அடிப்படையாக கொண்டு கதைகளை புனைவார்கள். இது மிகவும் தவறானது. எமது சமூகம் அனைத்தும் சிறந்த நியாயமான சமூகமல்ல. சகல காலங்களிலும் தவறுகள் நடந்துள்ளன என்றார்.

எவ்வாறாயினும் முன்னாள் பாதுகாப்புச் செயலாளரின் இந்த தகவலானது மிகவும் பாரதூரமானது என அரசியல் அவதானிகள் கூறியுள்ளனர்.

இந்த ஆட்கடத்தல் சம்பவங்களே ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணைக்குழு இலங்கை மீது சுமத்தும் பிரதான குற்றச்சாட்டாகும். எதிர்காலத்தில் நடத்தப்படும் விசாரணைகளில் கோத்தபாய ராஜபக்சவின் இந்த தகவலும் கவனத்தில் கொள்ளப்படும் எனவும் அரசியல் அவதானிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.