Breaking News

அரசியல் கைதிகளின் விடுதலையை விரைவில் சாத்தியமாக்க வேண்டும்!

தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை விரைவில் சாத்தியமாக்கப்படல் வேண்டும் என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா வலியுறுத்தியுள்ளார். 

இவ் விடயம் தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்துள்ள செயலாளர் நாயகம், தங்களது விடுதலை கோரி உண்ணாவிரதமிருந்த தமிழ் அரசியல் கைதிகளிடம், இம்மாதம் 07ம் திகதிக்கு முன்பதாக இது குறித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்ற ஜனாதிபதி வழங்கிய உறுதி மொழி அறிவிக்கப்பட்டதன் பின்னர் அக் கைதிகள் தமது உண்ணாவிரதப் போராட்டத்தை தற்காலிகமாகக் கைவிட்டனர். 

இந்நிலையில், இவர்களுக்கு வழங்கப்பட்ட காலக்கெடு இன்றுடன் முடிவடைகிறது. இந்த நிலையில், இவர்களது விடுதலை தொடர்பில் பொறுப்புக் கூற வேண்டிய பலரும் பல்வேறு விதமான கருத்துக்களைத் தெரிவித்து வருகின்றனர். 

தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை பிரதானப்படுத்தி தொடர்ந்து வந்த பல தேர்தல்களிலும் மக்களிடம் வாக்குகளைக் கேட்டு, இன்று அரசாங்கத்தில் பதவிகள் பெற்று, இணக்க அரசியலில் பங்கெடுத்து வருபவர்கள், தங்களுக்கும் தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலைக்கும் பொறுப்பில்லை என்ற வகையில் அரசு தரப்பை மாத்திரம் குற்றஞ்சாட்டி கருத்துக்களை வெளியிட்டு வருகின்றனர். 

இதன் மூலம் இப் பொறுப்பில் இருந்து தாங்கள் தப்பித்துக் கொள்ளலாம் என தங்களது வழமையான அணுகுமுறையையே இவர்கள் இப்போதும் மேற்கொள்ள முற்படுகின்றனர். ஆனால், எமது மக்கள் தொடர்ந்தும் ஏமாறப் போவதில்லை என்பதை இந்த சுயநல அரசியல்வாதிகள் உணர்ந்து செயற்பட வேண்டும். அந்த வகையில், தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலைக்கு முழுமையான பொறுப்பை ஏற்று, தங்களது இணக்க அரசியல் மற்றும் அரசியல் அதிகாரங்களை பயன்படுத்தி அரசுடன் கலந்துரையாடி, பொது மன்னிப்பு அடிப்படையில் தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை விரைவில் சாத்தியமாக்க முன்வர வேண்டும். 

ஏற்கனவே கடந்த காலத்தில் அரசின் நூறு நாட்கள் வேலைத்திட்டத்தில் தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை சாத்தியமாக்கக் கூடிய அரிய வாய்ப்பு கிட்டியிருந்தும், அதனை தங்களது சுயநலன்களுக்காக சரிவரப் பயன்படுத்தத் தவறியவர்கள், தற்போதும் சாக்குப் போக்குகளைக் கூறிக்கொண்டிருக்காமல் உரிய செயற்பாடுகளில் இறங்க வேண்டும் என்று டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.