தமிழ் மக்களின் காணிகள் வன இலாகா திணைக்களத்தின் சொத்துக்களா? : சிவசக்தி ஆனந்தன் குற்றச்சாட்டு
வவுனியாவில் தமிழ் மக்களுக்கு சொந்தமான காணி அனுமதிப்பத்திரம் உள்ள காணிகளையும், காணி அனுமதிப்பத்திரம் இல்லாத காணிகளையும் தமது திணைக்களத்துக்கு உரித்துடைய காணிகள் எனக்கூறி வன இலாகா திணைக்களம் சுவீகரித்து வருவதாக வன்னி பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் குற்றம் சாட்டியுள்ளார்.
இவ்விடயம் தொடர்பில் அவர் மேலும் தெரிவித்திருப்பதாவது,
வவுனியாவில் உள்ள தமிழ் மக்களுக்கு உரித்துடைய காணிகளுக்கு முறைப்படியான உறுதிப்பத்திரங்கள் காணப்படவில்லை.
நாட்டில் நிலவிய போர்ச்சூழல் காரணமாக அவற்றுக்கு முறைப்படியான காணி உறுதிப்பத்திரங்களை வழங்கும் செயற்பாடுகள் தவறவிடப்பட்டுள்ளன. எனினும் குறித்த காணிகள் பிரதேச செயலாளர்கள் மற்றும் கிராம அலுவலர்கள் பொதுமக்களுக்கு உரித்துடைய காணிகளென எழுத்து மூலம் உறுதிப்படுத்தியுள்ளனர்.
அது மட்டுமன்றி மக்களுக்குச் சொந்தமான அக்காணிகளுக்கு மிகவிரைவாக அனுமதிப்பத்திரம் பெற்றுக்கொடுக்க நடவடிக்கை மேற்கொண்டு வருவதாகவும் தெரிவித்துள்ளனர்.
மேலும், அவ்வாறு தெரிவிக்கப்பட்ட பின்னரும் கூட, நீண்ட காலமாக மக்கள் குடியிருந்து வரும் அக்காணிகளை தமது திணைக்களத்துக்கு உரித்துடையவை என்று வன இலாகாவினர் தெரிவித்து எல்லைக்கற்கள் நாட்டுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். பிரதேச செயலர்களின் உத்தரவுகளையும் மீறி இவ்வாறு எல்லையிடப்படும் வலயங்களுக்குள் பொதுமக்களின் வயல் காணிகளும், பயிர்ச்செய்கை காணிகளும் உள்ளடங்குகின்றன.
அக்காணிகளில் பல வருடங்களுக்கு முன்பே அம்மக்கள் நாட்டி இன்று பயன்தரும் தென்னை, பனை மற்றும் பழ மரங்களும் உள்ளன. மக்கள் தமது சக்திக்கு உட்பட்டு கட்டிய பெறுமதியான வீடுகள் மற்றும் கிணறுகளும் உள்ளன. இன்று அக்காணிகளிலிருந்து அம்மக்களை வெளியேற்றுவது என்பது எவ்வாறு நியாயமான நடவடிக்கையாகும். அதுமட்டுமன்றி நல்லாட்சி எனக் கூறப்படும் புதிய ஆட்சிக்கும் எவ்வாறு பொருத்தமுடைதாகும். இச்செயற்பாடு எமது மக்களுக்கு திட்டமிட்டு இழைக்கப்படும் ஒரு அநீதியாகவே நாம் நோக்குகின்றோம்.
இன்னும் சில இடங்களில் மக்கள் தமது நிலங்களில் முழுமையாக குடியேறி வீட்டுத்திட்டத்தையோ, தமக்கான வாழ்வாதாரத்தையோ அமைத்துக்கொள்ளாத நிலையில், அக்காணிகளையும் எல்லைக்கல் இட்டு சுவீகரிப்பது ஏற்றுக்கொள்ள முடியாது. இதனால் கிராம மட்ட அமைப்புகளுக்கும் குறித்த திணைக்களத்துக்கும் இடையில் பலதரப்பட்ட முரண்பாடுகள் தோன்றியுள்ளன.
வடக்கு கிழக்கிலுள்ள இராணுவத்தினர், தங்களுக்கு அரச அதிபரோ, அல்லது அரச அதிகாரிகளோ, மக்களின் அரசியல் பிரதிநிதிகளோ எவரும் கட்டளை இடமுடியாது என்ற தோரணையில் பொதுமக்களுக்கு உரித்துடைய காணிகளை கபளீகரம் செய்கின்றனர். மறுபுறத்தில் அதேபோக்கிலான அதிகார தோரணையில் வன இலாகாவினரும் ஏதேச்சதிகாரமாக செயற்படுகின்றனர். இது தொடர்பில் கடந்த கால அரசாங்கத்திடமும், தற்போதைய புதிய அரசாங்கத்திடம் நாங்கள் பல தடவைகள் சுட்டிக்காட்டியுள்ளோம்.
புதிய நல்லாட்சி அரசாங்கத்தால் கூட வன இலாகாவினரை கட்டுப்படுத்த முடியவில்லையா? காணி சுவீகரிப்பை தடுத்து நிறுத்த முடியவில்லையா? என்ற வினாக்களே எமக்குள் தோன்றியுள்ளன
வடக்கில் தமிழ் பேசும் மக்களுக்கு உரித்துடைய பூர்வீக காணிகளை சுவீகரிக்க நான்கு வகையான உத்திகள் பின்பற்றப்படுகின்றன. முப்படைகளுக்கென்றும், வன இலாகா திணைக்களத்துக்கு சொந்தமானது என்றும், தொல்பொருள் ஆராய்ச்சிக்கு என்றும், பறவைகள் சரணாலயத்துக்கு என்றும் வகைப்படுத்தி காணிகள் சுவீகரிக்கப்படுகின்றன.
வவுனியா வடக்கு பிரதேச செயலக பிரிவு, செட்டிகுளம் பிரதேச செயலாளர் பிரிவு, வவுனியா பிரதேச செயலக பிரிவில் பூவரசங்குளம், கந்தன்குளம், புலவனூர், குருக்கள் ஊர், மடுக்குளம், வேலர்சின்னகுளம், பம்பைமடு பெரியகட்டு போன்ற பகுதிகளிலும், முல்லைத்தீவு, மன்னார் மாவட்டங்களிலும் முப்பது நாற்பது வருடங்களுக்கு முன்னர் காடு வெட்டி களனி செய்து வந்த மக்களின் காணிகளை இந்த நான்கு உத்திகளையும் பயன்படுத்தி சுவீகரிக்கும் நடவடிக்கைகள் தொடர்பில் பாதிக்கப்பட்டுள்ள மக்கள் எனது கவனத்துக்கு கொண்டு வந்துள்ளனர்.
இவ்விடயம் தொடர்பில் மக்கள் பிரதிநிதிகளும், அரசாங்க அதிபரும், பிரதேச செயலர்களும், கிராம அலுவலர்களும், வன இலாகா திணைக்கள அதிகாரிகளும் கூட்டாக கூடிப்பேசி சுமுகமான தீர்வைக்காண ஒரு அவசர சந்திப்பை ஏற்பாடு செய்யுமாறு வவுனியா மாவட்ட அரசாங்க அதிபரைக் கோரியுள்ளேன்.
மக்களின் நலனுக்கும் பாதுகாப்புக்கும் குந்தகம் விளைவிக்கும் இத்தகைய நடவடிக்கைகளை உடனடியாக தடுத்து நிறுத்துமாறு ஜனாதிபதி மற்றும், பிரதமர், காணி அமைச்சர், மீள்குடியேற்ற அமைச்சர் ஆகியோருக்கும் கடிதம் மூலம் வலியுறுத்தியுள்ளேன்
போரால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு தற்போதும் கூட பல்வேறு தேவைப்பாடுகள் காணப்படுகின்றன. இவ்வாறான சூழலில் அவர்களுக்கு இன்று மீதமாய் உள்ள ஒரே சொத்தான காணிகளையும் பறித்தெடுப்பது என்பது நல்லாட்சிக்கு கேடாகும்.
வன்னி மாவட்ட மக்களின் வாழ்க்கைச்சூழலை பொறுத்தவரையில் அம்மக்களுக்கும், அம்மக்களின் சந்ததிகளுக்கும் உள்ள ஒரே வாழ்வாதாரம் மற்றும் உயில் சொத்து காணிகளாகும். எனவே அவர்களின் சந்ததிகளும் இந்த காணிகளை நம்பியே தமது எதிர்கால வாழ்க்கையை அமைத்துக்கொள்ள வேண்டிய பாரம்பரிய வழக்கமும் காணப்படுகின்றது. அவ்வாறான நிலையில் இச்செயற்பாடு பனையால் விழுந்தவரை மாடேறி மிதிப்பது போன்றதற்கு ஒப்பானதாகின்றது எனவும் தெரிவித்துள்ளார்.
- See more at: http://athavansrilanka.com/?post_type=post&p=289479#sthash.uDxquwPl.dpuf