ஐ.நா. தீர்மானம் குறித்து சர்வகட்சி மாநாடு இன்று
ஐ.நா. தீர்மானத்தை நடைமுறைப்படுத்துவது தொடர்பில் ஆராயும் சர்வகட்சிக் கூட்டம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் இன்று மாலை 4 மணிக்கு ஜனாதிபதி செயலகத்தில் நடைபெறவுள்ளது.
ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் இலங்கை விவகாரம் குறித்து நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தில் முன்மொழியப்பட்டுள்ள சிபாரிசுகளை நடைமுறைப்படுத்துவது தொடர்பில் அரசியல் கட்சிகளின் அபிப்பிராயங்களைப் பெறும் நோக்கிலேயே குறித்த விசேட சர்வகட்சிக் கூட்டத்துக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அழைப்பு விடுத்திருந்தார்.
இது குறித்து, முதலாவது கூட்டம் கடந்த மாதம் 22ஆம் திகதி நடைபெற்றது.
இதன்போது, ஐ.நா. தீர்மானம் பற்றி விரிவாகப் பேசப்பட்டதுடன், இலங்கையின் அரசமைப்புக்கு உட்பட்டதாகவே நடவடிக்கைகள் இடம்பெறும் என்று ஜனாதிபதி மைத்திரிபால உறுதியளித்திருந்தார்.
அத்துடன், ஐ.நா. தீர்மானம் தொடர்பில் கட்சிகளின் நிலைப்பாட்டை எழுத்துமூலம் அறிவிப்பதற்கும் இன்றுவரை (17ஆம் திகதி) கால அவகாசம் வழங்கப்பட்டது. எனவே, இன்றைய கூட்டத்தில் அரசியல் கட்சிகள் தமது நிலைப்பாட்டை அறிக்கையூடாக ஜனாதிபதியிடம் ஒப்படைக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.