விமல் வீரவங்ச ஐ.தே.க.யின் ஓர் ஒப்பந்தக்காரர் – அமைச்சர் டிலான்
விமல் வீரவங்ச ஐக்கிய தேசியக் கட்சியின் தேவைகளை நிறைவேற்றிக் கொடுக்கும் ஒரு ஒப்பந்தக்காரர் என்பது அவரின் நடவடிக்கைகள் எடுத்துக் காட்டுவதாக ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் ஊடகப் பேச்சாளர் டிலான் பெரேரா தெரிவித்துள்ளார்.
ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் ஒரு பகுதியை உடைத்துக் கொண்டு சென்ற அவர், இன்னும் 10 கட்சிகளுடன் எதிர்வரும் உள்ளுராட்சி சபைத் தேர்தலில் போட்டியிட கூட்டணி அமைக்கவுள்ளார். இவரின் இந்த செயற்பாடு ஐக்கிய தேசியக் கட்சியுடன் செய்துகொண்டுள்ள ஒப்பந்தத்தை எடுத்துக் காட்டுகின்றனது.
சட்ட ரீதியற்ற கடவுச் சீட்டுடன் விமல் வீரவங்ச அகப்பட்டபோது, அவரைக் காப்பாற்றுவதற்கு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தனது எல்லையைக் கடந்து முயற்சி எடுத்தார் என்பதும் இவர்களுக்கிடையிலான உறவை எடுத்துக் காட்டுகின்றது.
ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியை துண்டு துண்டாக உடைக்க வேண்டும் என்ற தேவை ஐக்கிய தேசியக் கட்சிக்கு உள்ளது. தற்பொழுது ஐ.தே.க. இந்த வேலையைச் செய்வதற்கான ஒப்பந்தத்தை விமல்வீரவங்சவுக்கு வழங்கியுள்ளது.
விமல் வீரவங்சவுக்கு எதிராக முன்வைக்கப்பட்ட அதே குற்றச்சாட்டு தான் குமார குணரட்னத்துக்கு முன்வைக்கப்பட்டுள்ளது. விமல் வீரவங்சவுக்காக பிரதமர் செயற்பட்ட வேகத்தை, குமார குணரட்ன விடயத்தில் காணமுடியாதுள்ளதாகவும் அவர் மேலும் கூறியுள்ளார்.