தடை நீக்கப்பட்ட தமிழ் அமைப்புக்கள் குறித்த தகவல் கிடைக்கப்பெறவில்லை!
தடை நீக்கப்பட்டதாக கூறப்படும் தமிழ் அமைப்புக்கள் மற்றும் தனிநபர்கள் குறித்த விபரம் இதுவரை கிடைக்கப் பெறவில்லை என, குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
இன்று அல்லது நாளை இந்தத் தகவல்கள் கிடைக்கப் பெறலாம் எனவும் அந்தத் திணைக்களம் கூறியுள்ளது.
தடை நீக்கம் செய்யப்பட்ட அமைப்புக்கள் மற்றும் நபர்கள் குறித்து எழுத்து மூலம் தகவல் கிடைக்க வேண்டும் எனவும், அதன் பின்னர் இது தொடர்பில் தீர்மானிக்க முடியும் எனவும் குடிவரவு குடியகல்வு திணைக்களம் மேலும் சுட்டிக்காட்டியுள்ளது.
எட்டு தமிழ் அமைப்புக்களின் தடைகளை நீக்க இலங்கை அரசாங்கம் அண்மையில் தீர்மானித்திருந்தது. விஷேட வர்த்தமானி அறிவித்தல் ஒன்றில் மூலம் குறித்த தடைகள் நீக்கப்பட்டுள்ளதாக, பாதுகாப்பு அமைச்சு கூறியுள்ளது.
மேலும் தீவிரவாத நடவடிக்கைகளுடன் தொடர்புடையதாக கூறப்பட்டு 2014ம் ஆண்டு தடைவிதிக்கப்பட்ட 424 பேரில் 269 பேரின் தடைகளும் நீக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.