Breaking News

உள்ளூராட்சித் தேர்தல் குறித்து ஆராய கொழும்பில் கூடுகிறது கூட்டமைப்பு

உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தலை எதிர்கொள்வதற்கான பரப்புரை உத்திகள் தொடர்பாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அடுத்தவாரம் கொழும்பில் கலந்துரையாடவுள்ளது.

அடுத்த ஆண்டு துவக்கத்தில் உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தலை நடத்த இலங்கை அரசாங்கம், தயாராகி வருகிறது.இந்தநிலையில், வடக்கு கிழக்கில் உள்ள அனைத்து உள்ளூராட்சி சபைகளுக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு போட்டியிடும் என்று, கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

அதேவேளை, இந்த தேர்தல் தொடர்பாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் உள்ள கட்சிகள் கொழும்பில் அடுத்தவாரம் கூடி ஆராயவுள்ளதாக, கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் துரைரட்ணசிங்கம் குறிப்பிட்டுள்ளார்.

“இந்த தேர்தலில் இளம் வேட்பாளர்களை நிறுத்துவது சிறப்பு அம்சங்களில் ஒன்றாக இருக்கும். தேர்தல் பரப்புரைகள் தொடர்பாக கலந்துரையாடுவதற்காக அடுத்த வாரம், நாம் கொழும்பில் சந்திக்கவுள்ளோம்.

வேட்புமனுக்களை எவ்வாறு பகிர்ந்து கொள்வது என்பது குறித்து, கூட்டமைப்பில் உள்ள கடட்சிகளுடன் கலந்துரையாடவுள்ளோம். கடந்த உள்ளூராட்சித் தேர்தலில் கூட்டமைப்பின் சார்பில் 78 உறுப்பினர்கள் தெரிவாகினர்.கடந்த முறை நாம் இழந்த, யாழ்ப்பாணம் மற்றும் மட்டக்களப்பு மாநகர சபைகளையும், இந்தமுறை கைப்பற்றுவோம் என்று நம்புகிறோம்.” என்று அவர் தெரிவித்துள்ளார்.