மாதுளுவாவே சோபித தேரர் இன்று அதிகாலை காலமானார்
சிங்கப்பூர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த, சமூக நீதிக்கான தேசிய இயக்கத்தின் தலைவரும், கோட்டே சிறி நாகவிகாரையின் விகாராதிபதியுமான, வண.மாதுளுவாவே சோபித தேரர் (வயது73) இன்று அதிகாலையில் காலமானார்.
சிங்கப்பூரில் உள்ள மவுன்ட் எலிசபெத் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் இன்று அதிகாலை 4.30 மணியளவில் அவர் காலமானதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கொழும்பில் தனியார் மருத்துவமனை ஒன்றில் இதய சத்திரசிகிச்சை செய்து கொண்டதையடுத்து இவரது உடல் நிலை பாதிக்கப்பட்டதையடுத்து, சிங்கப்பூரக்கு மேலதிக சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டார்.
அங்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் அவர் இன்று அதிகாலையில் காலமானார். மாதுளுவாவே சோபித தேரர், இலங்கையின் நிறைவேற்று அதிகார ஆட்சி முறையை ஒழிப்பதற்கு பெரும் போராட்டங்களை நடத்தியவர் என்பதுடன், மகிந்த ராஜபக்ச ஆட்சிக்கு முடிவு கட்டுவதற்கும், முக்கிய பங்காற்றியவர்.
1987ஆம் ஆண்டு, இந்தியப் பிரதமர் ராஜீவ்காந்தியுடன், இலங்கை ஜனாதிபதி ஜேஆர்.ஜெயவர்த்தன செய்து கொண்ட உடன்பாட்டுக்கு எதிராக முதலில், போராட்டங்களை நடத்தியவரும், இவரே என்பது குறிப்பிடத்தக்கது.