Breaking News

அரசியல் கைதிகள் நாளை மீண்டும் உண்ணாவிரதப் போரில் குதிக்கின்றனர்

தமது விடுதலை தொடர்பாக, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அளித்திருந்த வாக்குறுதி இன்றுடன் நிறைவடையவுள்ள நிலையில், தாம் மீண்டும் உண்ணாவிரதப் போராட்டத்தில் குதிக்கவுள்ளதாக தமிழ் அரசியல் கைதிகள் தெரிவித்துள்ளனர்.

நீண்டகாலமாக தடுத்து வைக்கப்பட்டுள்ள தமது விடுதலை தொடர்பான கோரிக்கைகள் நிராகரிக்கப்பட்டுள்ளதுடன், வழங்கப்பட்ட வாக்குறுதிகளும் குறித்த காலப்பகுதிக்குள் நிறைவேற்றப்படாத நிலையில், இடைநிறுத்திய உண்ணாவிரதப் போராட்டத்தை நாளை மீண்டும் ஆரம்பிக்கப் போவதாக சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள 217 தமிழ் அரசியல் கைதிகளும் அறிவித்துள்ளனர்.

தமது விடுதலை தொடர்பாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் வாக்குறுதியோடு எதிர்க்கட்சித்தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன் வழங்கிய உறுதி மொழிக்கு அமைவாகவே கடந்த மாதம் 12ஆம் நாள் ஆரம்பித்த சாகும்வரையிலான உண்ணாவிரதப் போராட்டத்தை 17ஆம் நாள் தற்காலிகமாக இடைநிறுத்தியிருந்ததாகவும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

நவம்பர் 7ஆம் நாளுக்குள் அரசியல் கைதிகளின் பிரச்சினைக்கு தீர்வு காணப்படும் என்று ஜனாதிபதி உறுதிமொழி அளித்திருந்தார்.எனினும், இந்தக் காலகட்டத்துக்குள் ஒரு தமிழ் அரசியல் கைதியேனும் விடுவிக்கப்படவில்லை. 32 கைதிகளை நாளை மறுநாள் பிணையில் விடுவிக்கப் போவதாகவும், மேலும் 30 பேரை வரும் 20ஆம் நாளுக்குள் விடுவிக்கவிருப்பதாகவும் சிறிலங்கா அரசாங்கம் தெரிவித்துள்ளது.

அதேவேளை, தண்டனைக் கைதிகளாக உள்ள 48 பேருக்கு பொதுமன்னிப்பு அளிப்பது குறித்து விரைவில் முடிவெடுப்பதாக ஜனாதிபதி தெரிவித்துள்ளார். எஞ்சிய அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பாக அமைச்சரவை உப குழுவொன்று ஆராய்ந்து முடிவெடுக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நடைமுறைகள் அனைத்தும் ஜனாதிபதி மைத்தரிபால சிறிசேன வழங்கிய வாக்குறுதிகளுக்கு அமைய, இன்றைக்குள் செயற்படுத்தப்படும் வாய்ப்பில்லாத நிலையில், தமக்கு பொதுமன்னிப்பு அளித்து விடுதலை செய்ய வேண்டும் என்று கோரி அரசியல் கைதிகள் மீண்டும் நாளை போராட்டத்தை ஆரம்பிக்கவுள்ளனர்.