இனப்பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு புதிய அரசியலமைப்பில் உள்ளீர்ப்பு
இனப்பிரச்சினைக்கு இறுதியானதும் உறுதியானதுமான தீர்வை பெற்றுக் கொடுத்து அது புதிய அரசியலமைப்பில் உள்ளீர்க்கப்படும் எனத் தெரிவித்த அரசாங்கம் உள்ளக பொறிமுறை இலங்கையின் சட்டங்களின் அடிப்படையில் ஏற்படுத்தப்பட்டு அதற்கு சட்ட ரீதியான அந்தஸ்து வழங்கப்படுமென்றும் அறிவித்தது.
பாராளுமன்றத்தின் சபை முதல்வர் அலுவலகத்தில் நேற்று வெள்ளிக்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் உரையாற்றும் போதே சபை முதல்வரும் அமைச்சருமான லக்ஷ்மன் கிரியெல்ல இவ்வாறு தெரிவித்தார்.
அமைச்சர் இங்கு தொடர்ந்து உரையாற்றுகையில்
வடக்கு கிழக்கு இனப்பிரச்சினைக்கு தீர்வு காணப்படாமல் அது இன்று வரை தொடர்கதையாக தொடர்வதற்கு நாட்டை ஆட்சி செய்த இரண்டு பிரதான கட்சிகளும் பொறுப்பேற்க வேண்டும். இப் பிரச்சினைக்கு இறுதியானதும் உறுதியானதுமான தீர்வை பெற்றுக் கொள்ள வேண்டுமானால் பிரதான கட்சிகளான ஐ.தே.கட்சியும் சுதந்திரக் கட்சியும் இணைய வேண்டும்.
இன்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோர் இது தொடர்பில் சிந்தித்து தூர நோக்குடன் தேசிய அரசாங்கத்தை ஏற்படுத்தியுள்ளனர்.இவ் அரசு இரண்டு அல்லது இரண்டரை வருடங்கள் தொடரலாம். அதன் பின்னர் இரண்டு கட்சிகளும் பிரியலாம். இல்லாவிட்டால் இவ் ஆட்சி தொடரப்படலாம். ஆனால் தற்போது நாம் இனப் பிரச்சினைக்கு தீர்வை காண வேண்டும்.
அத் தீர்வு தொடர்பாக வரைவை ஏற்படுத்தி இரண்டு கட்சிகளும் இணங்கி அந்தத் தீர்வு வரைவை புதிய அரசியலமைப்பில் உள்ளீர்க்க வேண்டும். இது முடியாத விடயமல்ல. எம்மால் இதனை செய்ய முடியும்.அன்று 1956 இல் தமிழ் மக்கள் மொழி உரிமையை கேட்டார்கள். ஆனால் அது மறுக்கப்பட்டது.இதன் காரணமாகவே இனப் பிரச்சினை பூதாகாரமாகி யுத்தமாகி நாடு அழிந்தது.
எனவே நாட்டின் இனப் பிரச்சினை பூதாகாரமாக தலை தூக்கியதற்கு இரண்டு பிரதான கட்சிகளும் பொறுப்பேற்க வேண்டும்.இச் சூழ் நிலையில் இரண்டு பிரதான கட்சிகளும் ஒன்றிணையா விட்டால் தீர்வு காண முடியாது.எனவே இன்று ஐ.தே கட்சியும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும் ஒன்றிணைந்து தேசிய அரசு ஏற்படுத்தப்பட்டு நல்லாட்சி முன்னெடுக்கப்படுகிறது. இது நல்ல சந்தர்ப்பம். கடந்த காலங்களில் எமது நாட்டுக்கு எதிராக பெரும் நெருக்கடிகள் தலை தூக்கின.
ஆனால் இன்று இரண்டு கட்சிகளும் இணைந்து நாட்டில் நல்லாட்சி ஏற்படுத்தப்பட்டுள்ளதால் சர்வதேசம் எமக்கு ஆதரவான நிலைப்பாட்டை எடுத்துள்ளது.தேசிய அரசு ஏற்படுத்தப்பட்ட குறுகிய காலத்திற்குள் சர்வதேசம் முழு ஆதரவை வழங்கியுள்ளது.
உள்ளக பொறி முறை விரைவில் ஏற்படுத்தப்படும். இலங்கையின் சட்டங்களுக்கு அமைய அப் பொறிமுறையை ஏற்படுத்தி அதற்கு சட்ட ரீதியான அந்தஸ்து வழங்கப்படும்.இவ்விடயத்தில் எந்த விதமான பிரச்சினையும் கிடையாது என்றார்.