இராணுவத்தினர் போர்க்குற்றத்தில் ஈடுபடவில்லையாம்! டெஸ்மன்ட் டி சில்வாவின் அறிக்கை
இறுதிக்கட்ட யுத்தத்தின்போது இராணுவத்தினர் பாரியளவில் யுத்தக்குற்றத்தில் ஈடுபடவில்லையெனவும், விடுதலைப் புலிகளே யுத்தக் குற்றத்தில் ஈடுபட்டதாகவும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் சட்ட ஆலோசனை குழுவின் தலைவர் சேர் டெஸ்மன்ட் டி சில்வா தெரிவித்துள்ளார்.
யுத்தக்குற்றச்சாட்டுக்கள் குறித்து தான் வெளியிட்ட அறிக்கையொன்றிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
குறித்த அறிக்கையில் இறுதிக்கட்டப் போரின் போது விடுதலைப் புலிகளே போர்க்குற்றங்களை புரிந்ததாகவும், போர்தவிர்ப்பு வலயத்தினுள் விடுதலைப்புலிகள் பொதுமக்களுடன் சேர்ந்து தமது ஆயுத தளபாடங்களை நகர்த்திச் சென்றது முதலாவது போர்க்குற்ற நடவடிக்கை என்றும் குறிப்பிட்டுள்ள அவர், மனித அவலங்களுக்கு அவர்களே பொறுப்பு என குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் இறுதி தருணத்தில் விடுதலைப்புலிகள் பொதுமக்களை மனிதக் கேடயங்களாக பயன்படுத்தியதாகவும் அவர் குற்றஞ்சுமத்தியுள்ளார்.
எனினும் இராணுவத்தினர் அவ்வளவாக போர்க்குற்றத்தில் ஈடுபடவில்லையென்றும், சிறு சிறு தவறுகளே செய்திருக்கலாமெனவும் அவரது அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
ஏற்கனவே தாம் பரணகம ஆணைக்குழுவிற்கு வழங்கிய சட்ட ஆலோசனை ஆவணங்களில் சில பக்கங்கள் கையகப்படுத்தபட்டுள்ளதாக டெஸ்மண்ட டி சில்வா குற்றஞ்சாட்டியிருந்தமை குறிப்பிடத்தக்கது.