கூட்டமைப்புக்குள் இருவேறு கருத்துகள் - கைதிகளின் நிரந்தர விடுதலைக்கு பெரும் தடையாக உள்ளது
தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை விவகாரத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குள் இருவேறு கருத்துக்கள் நிலவுகின்றன. இது கைதிகளின் நிரந்தர விடுதலைக்கு பெரும் தடையாக உள்ளது. இதனை கருத்திற் கொண்டு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் எமது உறவுகளுக்காக ஒன்றிணைந்து செயற்பட வேண்டுமென கைதிகளின் உறவினர்கள் மற்றும் பெற்றோர்கள் தெரிவிக்கின்றனர்.
நவம்பர் 7 ஆம் திகதிக்கு முன்னர் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பான சரியான நிலைப்பாட்டை தெளிவுபடுத்த வேண்டும், பொது மன்னிப்பின் அடிப்படையில் தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்ய வேண் டும் அல்லது நிரந்தர தீர்வாக பொது விடுதலையை வலியுறுத்தி அனைவரும் ஏற்றுக்கொள்ளும் வகை யிலான தீர்வொன்றினை முன்வைக்க வேண்டுமெனக் கோரி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமாகிய இரா. சம்பந்தனுக்கு தமிழ் அரசியல் கைதிகளின் உறவினர்கள் மற்றும் பெற்றோர்கள் கடிதமொன்றினை அனுப்பி வைத்துள்ளனர்.
இது குறித்து தமிழ் அரசியல் கைதிகளின் உறவுகள் மேலும் தெரிவிக்கையில்,
தமிழ் அரசியல் கைதிகளை பொது மன்னிப்பின் அடிப்படையில் விடுதலை செய்வதுதான் ஒரே தீர்வு என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஒரு சாரார் கூறி வருகின்றனர். அதேவேளை, பொது மன்னிப்பின் அடிப்படையில் விடுதலை செய்வதானது போர்க்குற்ற விசாரணைக்கு சாதகமாக அமைந்துவிடுமென இன்னொரு சாராரும் கூறி வருகின்றனர். இவ்வாறு கூட்டமைப்புக்குள் இருவேறு கருத்துக்கள் நிலவுவதானது பெரும் வேதனையையும் கவலையையும் தருகிறது.
நீண்ட காலமாக எவ்வித விசாரணைகளுமின்றித் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்யுமாறு வலியுறுத்தி கடந்த காலங்களில் பல்வேறு போராட்டங்களை நடத்தினோம். அந்த சந்தர்ப்பங்களில் எமக்கு பலர் பல்வேறு விதமான வாக்குறுதிகளை வழங்கினார்கள். ஆனால் இதுவரையில் கைதிகளின் விடுதலை குறித்து எந்தவொரு சரியான நிலைப்பாடும் எட்டப்படவில்லை.
இவ்வாறு பல்வேறு சந்தர்ப்பங்களில் எமது கோரிக்கைகள் நிராகரிக்கப்பட்டு நாம் ஏமாற்றப்பட்டோம். ஆகையால் தான் கடந்த 12 ஆம் திகதி தமிழ் அரசியல் கைதிகள் தமது விடுதலையை வலியுறுத்தி மீண்டும் போராட்டத்தை ஆரம்பித்தனர். அந்த சந்தர்ப்பத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சி தலைவருமாகிய இரா. சம்பந்தனின் தலையீட்டினை தொடர்ந்து உண்ணாவிரதம் கைவிடப்பட்டது.
ஜனாதிபதி மீது தமக்கு நம்பிக்கை இருப்பதாகவும் அவருடன் பேச்சுவார்த்தைகளை நடத்தி கைதிகள் விடுதலை குறித்து சரியான நிலைப்பாட்டை எடுப்பதாகவும் வாக்குறுதி அளித்தார். அதற்கிணங்கவே தமிழ் அரசியல் கைதிகள் தமது போராட்டத்தை கைவிட்டனர். எனவே காலதாமதமின்றி எதிர்வரும் 7 ஆம் திகதிக்கு முன்னர் கைதிகள் விடுதலை விவகாரம் குறித்து எதிர்க்கட்சி தலைவர் எமக்கு தெளிவுபடுத்த வேண்டும்.
தமிழ் அரசியல் கைதிகளை பிணையில் விடுவிப்பதற்கான நடவடிக்கையினை மேற்கொள்ளவுள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது. அதேவேளை, சகல அரசியல் கைதிகளையும் பிணையில் விடுவிக்க கூடிய சாத்திய கூறுகள் இல்லை என சட்ட மா அதிபர் தெரிவித்துள்ளார்.
புதிய ஆட்சியிலாவது தமிழர் அடிப்படை பிரச்சினை தீர்க்கப்படுமென எண்ணியிருந்த போதும் கைதிகள் விடுதலை விடயத்தில் கூட இதுவரையில் எவ்வித முன்னேற்றமும் காணப்பட்டவில்லை. எனவே இவ்வாறான சந்தர்ப்பத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் ஒருமித்த குரலாக ஒன்றிணைந்து தமிழ் அரசியல் கைதிகளின் நிரந்தர தீர்வுக்காக செயற்பட வேண்டும் எனவும் அக்கடிதத்தில் வலியுறுத்தியுள்ளதாகவும் அக்கடிதத்தின் பிரதியொன்று யாழ். மாவட்ட தமிழரசு கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜாவுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக கைதிகளின் உறவுகள் தெரிவிக்கின்றனர்.