மஹிந்தவின் மோசடிகளை வெளிப்படுத்த வேண்டும்
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் இரகசிய மாளிகை தொடர்பிலான தகவல்கள் வெளியிடப்பட்டமை தேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலான விடயமல்ல. மக்களின் நிதியில் இவர்கள் செய்த மோசடிகளை வெளிப்படுத்த வேண்டும். அதேபோல் இவர் கள் தண்டிக்கப்படவும் வேண்டியது அவசியமாகும் என்று மக்கள் விடுதலை முன்னணி வலியுறுத்தியது.
அரச பாதுகாப்பு என்ற பெயரில் இவர்கள் உல்லாச வாழ்க்கையை வாழ்ந்துள்ளனர் எனவும் அக்கட்சி குற்றம் சாட்டியது.மக்கள் விடுதலை முன்னணியினால் நேற்று அதன் தலைமைக் காரியாலயத்தில் நடத்தப்பட்ட செய்தியாளர் சந்திப்பின் போதே கட்சியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் மேலும் கூறுகையில்,
ஜனாதிபதி மாளிகையின் கீழ் அமைக்கப்பட்டிருந்த இரகசிய நிலக்கீழ் மாளிகை தொடர்பில் தகவல்கள் வெளியிடப்பட்டமை நாட்டின் தேசிய பாதுகாப்பு விடயங்களை வெளிப்படுத்துவதாக அமைந்துள்ளது என்று குற்றம் சாட்டப்படுகின்றது. அதேபோல் பக்கச்சார்பான விடயம் என ஒரு சாரார் தெரிவிக்கின்றனர். ஆனால் பதுங்குகுழி எவ்வாறு இருக்கும், மாளிகை எவ்வாறு இருக்கும் என்பது எமக்கு நன்றாகத் தெரி யும். கடந்த காலங்களில் பதுங்கு குழி எவ்வாறு இருந்தது என்பதை அவதானித்தோம். ஆனால் இரண்டையும் கலந்த ஒரு இடத்தை இப்போது தான் கேள்விப் படுகின்றோம்.
இவ்வாறான ஒரு பதுங்குகுழியை எதற்காக அமைத்தனர். உயிரை பாதுகாக்க அமைக்கப்பட்டது என்றால் இதில் இத்தனை சொகுசான வசதிகள் எதற்கு? இந்த மாளிகையில் நீர்த்தடாகம், குளிரூட்டப்பட்ட படுக்கையறை வசதிகள், நவீன தொலைக்காட்சி வசதிகள், உடற்பயிற்சி அறைகள், இத்தாலியில் இருந்து கொண்டுவரப்பட்ட அலங்காரப்படுத்தல் பொருட்கள் எதற்கு தேவைப்படுகின்றன. அவற்றின் மூலமாக மஹிந்த ராஜபக் ஷ எவ்வாறு தனது உயிரை பாதுகாத்துக்கொள்ள முடியும்.
இந்த மாளிகைக்காக பயன்படுத்தப்பட்ட அனைத்து பொருட்களும் பலகோடி ரூபாய்கள் பெருமதியானவையாகும். ஆகவே மக்களின் பணத்தில் இவர்கள் எவ்வாறு சொகுசாக வாழ்கின்றனர் என்பது இப்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
இவ்வாறு தமது கொள்ளைகள் வெளியில் தெரியவரும் என மஹிந்தவோ அல்லது அவரது குடும்பத்தினரோ சற்றும் எண்ணியிருக்க மாட்டார்கள். இந்த நாட்டில் நிரந்தரமாக தனது ஆட்சியை முன்னெடுக்க முடியும், முழுமையான அதிகாரங்களை தமது கட்டுப்பாட்டின் கீழ் வைத்திருக்க முடியும் என்றே அவர்கள் நினைத்தனர்.
அவ்வாறு இருக்கையில் அவர்களின் பாரிய கொள்ளைகள், மக்களின் பணத்தை எவ்வாறு சூறையாடியுள்ளனர் என்பது இப்பொது வெளிவர ஆரம்பித்துள்ளது. ஆகவே இந்த விடயங்களை இப்படியே விட்டுவிடாது முழுமையான உண்மைகளை வெளிக்கொண்டுவர வேண்டும்.
அதேபோல் இந்த குற்றச்சாட்டுகளை சட்டபூர்வமாக நிரூபித்து கடந்த காலங்களில் செய்த ஊழல்கள் தொடர்பில் இவர்கள் மீது சட்ட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
அரச பாதுகாப்பு என்ற முத்திரையை பதித்துக்கொண்டு மஹிந்த ராஜபக் ஷ குடும்பத்தினர் பாரிய மோசடிகளையே மேற்கொண்டுள்ளனர். அதேபோல் உல்லாச வாழ்க்கையை வாழ்ந்துள்ளனர். இது முழுமையான சர்வாதிகார போக்கு மட்டுமல்லாது பாரிய கொள்ளையாகும். ஆகவே இதற்கான நடவடிக்கைகளை அரசாங்கம் முன்னெடுக்க வேண்டும் எனக் குறிப்பிட்டார்.