Breaking News

ராஜித ஏன் கோபமாக இருக்கின்றார்! விளக்குகிறார் விஜயதாச

சுகாதார அமைச்சர் ராஜித சேனாரட்ன தரம் குறைந்த மருந்துப் பொருட்களை இறக்குமதி செய்து நீதிமன்றில் தண்டிக்கப்பட்டவர் என நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

ராஜித சேனாரட்ன தம்முடன் மிக நீண்ட காலமாக குரோத உணர்வுடன் பழகி வருவதாகக் குற்றம் சுமத்தியுள்ளார். ராஜித நீதிமன்றில் தண்டிக்கப்பட்டு பாராளுமன்ற உறுப்புரிமையை இழந்தவர் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

நீதிமன்ற உத்தரவிற்கு அமைய பாராளுமன்ற உறுப்புரிமையை இழந்த காலம் முதல், ராஜித தம்முடன் பகைமை பாராட்டி வருவதாகக் குற்றம் சுமத்தியுள்ளார். தரம் குறைந்த மற்றும் காலாவதியான மருந்து பொருட்களை இறக்குமதி செய்தமைக்காக ராஜித நீதிமன்றில் தண்டிக்கப்பட்டவர் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

முப்படையினரும் அரசாங்க மருந்தகக் கூட்டுத்தாபனத்திற்கும் தரம் குறைந்த மருந்துப் பொருட்களை விநியோகம் செய்து தண்டிக்கப்பட்ட ஒரே பாராளுமன்ற உறுப்பினர் இன்று அவன்ட் கார்ட் பற்றி பேசுவதாகத் தெரிவித்துள்ளார்.ஏனையவர்களை கள்வர்களாக சித்தரிக்கும் ராஜித இணை அமைச்சரவைப் பேச்சாளராக நியமிக்கப்பட்டுள்ளமை வெட்கப்பட வேண்டியதாகும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அமைச்சரவை பேச்சாளர்களின் கருத்துக்கள் குறித்து ஒட்டு மொத்த உலகமும் அவதானம் செலுத்தி வருவதாகக் குறிப்பிட்டுள்ளார். பொய்யான பொறுப்புணர்ச்சியற்ற வகையில் கருத்துக்களை வெளியிட்டு வரும் நபரை அமைச்சரவை இணைப் பேச்சாளராக அரசாங்கம் நீடித்தால்இ அதற்கான பலன்களை நீண்ட காலம் செல்ல முன்னதாக அனுபவிக்க நேரிடும் என அவர் தெரிவித்துள்ளார்.

தாம் அரசியலின் ஊடாக ஐந்து சதமேனும் சம்பாதிக்கவில்லை என அமைச்சர் விஜயதாச ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.