ராஜபக்ச குடும்பத்திற்கு எதிராக 725 விசாரணைகள்! மங்கள
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச, அவரது குடும்ப உறுப்பினர்கள் சம்பந்தப்பட்டுள்ளதாக முன்வைக்கப்பட்டுள்ள பாரிய ஊழல், மோசடிகள், வீண்விரையும்,கொலை, கொள்ளை உள்ளிட்டு 725 முறைப்பாடுகள் குறித்து தனித்தனி விசாரணைகள் நடத்தப்படுவதாக வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.
ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகத்தில் நேற்று (18) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
இவற்றைத் தவிர ராஜபக்ச குடும்ப உறுப்பினர்கள் நேரடியாக தொடர்புபட்டுள்ள 25 முறைப்பாடுகள் குறித்தும் விசாரணைகள் நடத்தப்படுவதாக அவர் தெரிவித்தார்.
லஞ்ச, ஊழல் மோசடி தவிர்ப்பு ஆணைக்குழுவிலும், காவல்துறைப் பிரிவிலும் ஆளணி பற்றாக்குறை இருப்பதால் இந்த விசாரணைகளில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
அரசாங்கம் பதவியேற்று ஒருவருட காலம் பூர்த்தியாகின்ற போதிலும், இந்த விசாரணைகளில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் இல்லாமை குறித்து கேள்வி எழுப்பப்பட்டபோதே வெளிவிவகார அமைச்சர் இவ்வாறு பதிலளித்தார்.