ஐ.நா.வில் தமிழீழக் கொடி பறக்கும் - மலேசியாவில் வைகோ
ஐ.நா.வில் தமிழ் ஈழத்தின் கொடி பட்டொளி வீசிப்பறக்கும் என்று ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார் மலேசிய நாட்டின் பினாங்கு மாநிலத் தலைநகரில், இலங்கையில் மனித உரிமை மீறல்கள் எனும் கருத்தரங்கு நேற்று ஆரம்பித்தது. இந்நிகழ்வில் கலந்துகொண்ட வைகோ மேலும் தெரிவித்துள்ளதாவது,
தமிழ் ஈழத்தில் மட்டும் அல்ல, உலகில் எந்தெந்த நாடுகளில் எல்லாம் தமிழர்கள் வசிக்கின்றார்களோ, அவர்களுடைய குரல்களையும் ஒடுக்குகின்ற முயற்சிகளில் இலங்கை அரசு மிகத் தீவிரமாக ஈடுபட்டுக்கொண்டு இருக்கின்றது. அதன் ஒரு கட்டமாகத்தான், இந்தக் கருத்தரங்கில் நான் கலந்து கொள்ளக்கூடாது என்பதற்காக, என் வருகையைத் தடுப்பதற்கான அனைத்து முயற்சிகளிலும் அவர்கள் ஈடுபட்டார்கள். மலேசிய அரசுக்கு எதிர்ப்புக் கடிதம் எழுதியதுடன், எனக்கு மலேசிய நுழைவு உரிமை மறுக்கக் கூடிய சூழ்நிலையை உருவாக்கி விட்டார்கள்.
ஈழத்தமிழர் படுகொலைகளை மூடி மறைக்க அவர்கள் மேற்கொள்கின்ற அனைத்து முயற்சிகளும் தோற்றுப்போகும்.
ஐ.நாவில் தமிழ் ஈழத்தின் கொடி பட்டொளி வீசிப்பறக்கும் என்பதை நான் உறுதியாகக் கூற விரும்புகிறேன். மக்கள் ஆட்சி, மனித உரிமைகள் என்றெல்லாம் மூச்சுக்கு மூச்சு முழங்கிக் கொண்டிருக்கின்ற சில நாடுகள், இலங்கை அரசோடு கை கோர்த்துக் கொண்டு, ஈழத்தமிழர்களின் உரிமைகளைப் பறிக்கின்ற, மனித உரிமைகளை முடக்குகின்ற முயற்சிகளில் ஈடுபட்டுக்கொண்டு இருப்பதைக் கண்டு, உலகத் தமிழர்கள் வேதனை அடைந்து இருக்கின்றார்கள்.
இந்த உலகத்திற்கே நாகரீகத்தைக் கற்றுத்தந்த தொல்குடிகள் தமிழர்கள். அத்தகைய பெருமை வாய்ந்த தமிழ் இனத்திற்கு, ஈழத்தமிழர்களுக்கு நேர்ந்துள்ள கொடுமைகளை பற்றி பேசி, நமது கவலையைப் பகிர்ந்து கொள்வதற்காக நாம் இங்கே கூடி இருக்கின்றோம். ஈழத்தமிழர்கள் தாம் இலங்கை மண்ணின் பூர்வீக குடிமக்கள். அவர்கள் தங்கள் தாயகத்தின் உரிமைக்காக தமிழ் ஈழத்திற்காக தன்னாட்சிக்காக போராடிக் கொண்டு இருக்கின்றார்கள். ஐ.நா. மனித உரிமைகள் ஆவணம் வரையறுத்து இருக்கின்ற கோட்பாடுகளின் படித்தான் அவர்கள் இந்தப் போராட்டத்தை நடத்திக் கொண்டு இருக்கின்றார்கள்.
2ஆம் உலகப் போரில் இழைத்த கொடுமைகளுக்காக நாஜி தளபதிகள் மீது நூரெம்பர்க் நீதிமன்றத்தில் விசாரணை நடத்தப்பட்டு அவர்களுக்கு மரண தண்டனை வழங்கப்பட்டது. ஆனால், இலங்கையில் இலட்சக்கணக்கான தமிழர்களின் படுகொலைக்கு காரணன சரத் பொன்சேகாவுக்கு அந்த நாட்டு இராணுவத்தின் மிக உயரிய விருதான பீல்ட் மார்ஷல் விருது வழங்கி பெருமைப்படுத்தி இருக்கின்றார்கள்.
தமிழ் ஈழத்தில் தற்போது 90 ஆயிரம் இளம் விதவைகள் இருக்கின்றார்கள். இப்போது இலங்கை அரசு ஒரு விசாரணைக் குழுவை நியமித்து இருக்கிறதாம். அந்தக் குழுவின் தலைவர் சந்திரிகா குமாரதுங்க. யார் அந்த சந்திரிகா? அவரும் ஒரு இனப்படுகொலைக்குற்றவாளிதான். மேலும் இந்தக் கருத்தரங்கத்தின் வாயிலாக கீழ்காணும் கோரிக்கைகளை நாம் வலியுறுத்துகின்றோம். தமிழ் ஈழத்தாயகத்தில் இருந்து இராணுவம் முழுமையாக வெளியேற வேண்டும். ஈழத் தமிழர்கள் மீதான அடக்குமுறைகள், சித்திரவதைகள் நிறுத்தப்பட வேண்டும். உள்நாட்டுக்குள் இடம்பெயர்ந்த தமிழர்கள், அவர்களது சொந்த வாழ்விடங்களில் மீளக் குடியமர்த்தப்பட வேண்டும்.
இலங்கைச் சிறைகளில் அடைக்கப்பட்டு சித்திரவதை செய்யப்படுகின்ற தமிழர்களை விடுவிக்க வேண்டும். செஞ்சிலுவைச் சங்கம் உள்ளிட்ட சர்லதேச தொண்டு நிறுவனங்கள் தமிழ் ஈழப் பகுதிக்குள் தங்கு தடையின்றிச் செயற்பட அனுமதிக்க வேண்டும்.
தமிழ் ஈழத்தில் சிங்களவர்களைக் கொண்டுவந்து குடியேற்றும் முயற்சிகளை நிறுத்த வேண்டும். இதற்காக, அறவழியிலான அனைத்து முயற்சிகளையும் நாம் மேற்கொள்ள வேண்டும். வட்டுக்கோட்டை தீர்மானத்தின் அடிப்படையில், தமிழ் ஈழம் அமைவதற்கான பொது வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும். உலகின் பல்வேறு நாடுகளில் சிதறிக் கிடக்கின்ற ஈழத்தமிழர்கள் அனைவரும் அந்த பொது வாக்கெடுப்பில் பங்குபெற வழிவகை செய்ய வேண்டும் என்பதை நாம் வலியுறுத்துவோம் என்று தெரிவித்துள்ளார்.