Breaking News

நாகதீபவின் பெயர் நயினாதீவாக மாற்றப்படாது – என்கிறது அரசாங்கம்

நாகதீப தீவின் பெயரை நயினாதீவு என்று இலங்கை அரசாங்கம் பெயர் மாற்றம் செய்யாது என்று உள்ளூராட்சி, மாகாணசபைகள் அமைச்சர் பைசர் முஸ்தபா தெரிவித்துள்ளார்.

யாழ் மாவட்டத்தில் உள்ள நயினாதீவில், நாகவிகாரை அமைக்கப்பட்ட பின்னர், அதனை புனித தலமாக பிரகடனம் செய்து இலங்கை கடற்படையின் உதவியுடன் விரிவுபடுத்தி வருகிறது அரசாங்கம்.

முற்றிலும் தமிழர்கள் வாழும் நயினாதீவில், இந்த விகாரையை வைத்து, சிங்கள மயப்படுத்தும் முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. இதற்கமைய, நயினாதீவின் 8 ஆம் வட்டாரத்தை நாகதீப வடக்கு எனவும், 12 ஆம் வட்டாரத்தை நாகதீப தெற்கு எனவும் இலங்கைஅரசாங்கம் பெயர் மாற்றம் செய்திருந்தது.

இதனை மீண்டும் நயினாதீவு என மாற்ற வேண்டும் என்றும், இதுகுறித்த வர்த்தமானியை உடனடியாக வெளியிட வேண்டும் என்றும் ஜனாதிபதி மற்றும் உள்ளூராட்சி, மாகாணசபை அமைச்சரைக் கோரும் தீர்மானம் ஒன்று, வடக்கு மாகாணசபையின் கடந்த வார அமர்வில் நிறைவேற்றப்பட்டது.

இதுகுறித்துக் கருத்து வெளியிட்டுள்ள, உள்ளூராட்சி, மாகாணசபைகள் அமைச்சர் பைசர் முஸ்தபா, நாகதீப தீவின் பெயரை நயினாதீவு என்று இலங்கை அரசாங்கம் பெயர் மாற்றம் செய்யாது என்று குறிப்பிட்டுள்ளார்.

அதேவேளை, இலங்கையின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்சவும், ஊர்களின் பெயர்களை மாற்றும் அதிகாரம் வடக்கு மாகாணசபைக்கு இல்லை என்றும், நாகதீபவின் பெயரை மாற்றக் கூடாது என்றும் தெரிவித்துள்ளார்.