ஜப்பானில் சுனாமி எச்சரிக்கை! மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றம்
ஜப்பானின் தென் மேற்கு கடற்பகுதியில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கம் காரணமாக, தெற்கு ஜப்பான் முழுவதும் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
ஜப்பான் நாட்டின் தென்மேற்கு கடற்கரையில் இன்று அதிகாலை 5.50 மணியளவில், 7 ரிக்டர் அளவிற்கு சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இதையடுத்து, க்யூஷூ தீவிலுள்ள கஹோஷிமா கடற்கரை பகுதியை ஒரு மீட்டர் உயரமுள்ள அலைகள் தாக்கக் கூடும் என ஜப்பானின் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதனால் கடற்கரையோரப் பகுதிகளில் இருப்பவர்கள் உடனடியாக பாதுகாப்பான வேறு இடத்திற்கு செல்லுமாறு மக்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். அத்தீவுக்கு அருகாமையில் கடற்கரைக்கு அப்பாலலுள்ள வேறு சில தீவுகளையும் உயரமான அலைகள் தாக்கக் கூடும் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2011 ஆம் ஆண்டு உலுக்கிய சுனாமியில் சிக்கி 18,000 மேற்பட்ட மக்கள் உயிரிழந்ததும், 2,30,000க்கும் மேற்பட்ட மக்கள் தங்களுடைய வீடுகள், உடைமைகளை இழந்து தவித்ததும் குறிப்பிடத்தக்கது.