ஆசிரியர் சேவையில் தரமுயர்வை காலதாமதமாக்குவதற்கு எதிராக மனுவில் கையெழுத்து
புதிய ஆசிரியர் பிரமாணக் குறிப்பின்படி ஆசிரியர் சேவையில் தரமுயர்வை முறையற்ற தாக்குவதற்கும் காலதாமதமாக்குவதற்கும் எதிராக கிழக்கு மாகாணத்தில், ஆசிரியர்கள் மனுவில் ஒப்பமிடும் பணி ஆரம்பமாகியுள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்ராலின் இன்று தெரிவித்தார்.
இது தொடர்பாக கிழக்கு மாகாண ஆசிரியர்களிடம் கையெழுத்துப் பெறும் நடவடிக்கைக்கான வேண்டுகோள் மனுக்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
கையெழுத்துப் பெறும் நடவடிக்கை ஏற்கெனவே மட்டக்களப்பில் ஆரம்பித்து விட்டதாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் மட்டக்களப்புக் கிளைச் செயலாளர் பி.உதயரூபன் தெரிவித்தார்.
கையெழுத்துப் பெறும் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, ‘புதிய ஆசிரியர் பிரமாணக் குறிப்பிற்கமைய தரமுயர்வோ சம்பள நிலுவையோ இது வரையும் கிழக்கு மாகாணத்தில் கடமையிலுள்ள ஆசிரியர்களுக்கு வழங்கப்படவில்லை.
அத்துடன் சம்பள முறைப்படுத்துவதிலும் குளறுபடிகள் நிறைந்துள்ளன. கடந்த தேர்தல் காலத்தில் கல்வியோடு சம்பந்தப்பட்ட விடயங்களில் கூறப்பட்ட வாக்குறுதிகள் பேச்சளவில் மட்டுமே நிறுத்தப்பட்டுள்ளதால் கிழக்கு மாகாணக் கல்வி அமைச்சில் சம்பந்தப்பட்ட அதிகாரிகளும், மாகாணக் கல்வி அதிகாரிகளும் மந்த கதியில் செயற்படுகிறார்கள்.
இந்நிலைக்கு எதிராக தொழிற்சங்க நிலைப்பாடொன்றை முன்னெடுப்பதற்கு முன்னர் முதற்செயற்பாடாக கையொப்பத்துடன் கூடிய மனுவை கல்வி அமைச்சருக்கு சமர்ப்பிப்பதற்கு கிழக்கு மாகாணத்தில் உள்ள 17 கல்வி வலயங்களிலும் மனுவில் கையொப்பமிடும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இதனை வினைத்திறனாக செயற்படுத்துவதற்கு கிழக்கு மாகாணத்தில் உள்ள சகல ஆசிரியர்களும் தவறாது மனுவில் கையொப்பமிடுமாறும் கேடகப்பட்டுள்ளது. மேலும் இது தொடர்பாக மேலதிக தகவல்களுக்கு 0772529277 எனும் தொலைபேசியினூடாக தொடர்பு கொள்ளுமாறும் கேட்கப்பட்டுள்ளது.