பதுங்கு குழியிலிருந்து தீர்மானங்களை ஒருபோதும் நாம் எடுக்கவில்லை
யுத்த காலகட்டத்தில் பதுங்குகுழியில் இருந்து எந்தவித தீர்மானங்களையும் எடுக்கவில்லை. அப்போது இவ்வாறு ஒரு பதுங்குகுழி இருந்தமை எனக்கு தெரியாது என முன்னாள் இராணுவத் தளபதியும் ஜனநாயக் கட்சியின் தலைவருமான பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்தார்.
ஜனநாயகத்தை கட்டியெழுப்பும் அரசாங்கத்தின் பயணம் இன்று ஏமாற்றமளிக்கின்றது எனவும் அவர் குறிப்பிட்டார்.
ஜனாதிபதி மாளிகையின் கீழ் அமைக்கப்பட்ட மாளிகை, பாதுகாப்பு நடவடிக்கைக்கான பதுங்குகுழி என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ள நிலையில் அது தொடர்பிலும் அரசாங்கம் மீது தொடச்சியாக விமர்சனங்களை முன்வைக்கும் காரணம் தொடர்பிலும் பத்திரிகை ஒன்று வினவியபோதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் கூறுகையில்,
கடந்த காலங்களில் இந்த நாடு மோசமான பயணத்தை மேற்கொண்டது. நாம் யுத்தத்தை வெற்றிகொண்டு நாட்டில் விடுதலையை ஏற்படுத்திக் கொடுத்தாலும் முன்னைய ஆட்சியாளர்கள் மிகவும் மோசமான வகையில் ஆட்சியை முன்னெடுத்தனர். அவ்வாறான சர்வாதிகாரப்போக்கில் நாடு பயணித்த காரணத்தினாலேயே ஜனவரி மாதம் மக்கள் புரட்சி ஒன்று ஏற்பட்டது. இந்த புரட்சியில் ஜனநாயகத்தை விரும்பும் நபர்களே கைகோர்த்தனர். அந்த அணியில் நானும் அர்ப்பணிப்புடன் என்னை இணைத்துக்கொண்டேன். ஜனவரி மாதம் ஆட்சி மாற்றம் மற்றும் கடந்த பொதுத் தேர்தலின் பின்னரான தேசிய அரசாங்கத்தின் செயற்பாடுகளில் மக்கள் நம்பிக்கை வைத்து இந்த இரண்டு தரப்பையும் ஆதரித்தனர்.
ஆனால் இந்த அரசாங்கமும் பழைய கொள்கைகளையும் மக்களை ஏமாற்றும் நடவடிக்கைகளையுமே மேற்கொள்கின்றது. குறிப்பாக ஊழல் மோசடிக்காரர்கள் தொடர்பில் இன்றுவரை எந்தவித நடவடிக்கைகளையும் இந்த அரசாங்கம் மேற்கொள்ளவில்லை என்பது ஏமாற்றமான விடயமாகவே உள்ளது. அதேபோல் சர்வதேச அழுத்தங்களில் இருந்து எமது இராணுவத்தை காப்பாற்றும் செயற்பாடுகளில் அரசாங்கம் போதியளவு அக்கறை காட்டுவதாகவும் தெரியவில்லை. ஆகவே ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும், பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் நாட்டை மீட்டெடுக்கும் நடவடிக்கைகளில் கூடிய அக்கறை செலுத்தவேண்டும்.
மேலும் ஊடகச் சுதந்திரம் இன்று உள்ளதா என்ற சந்தேகம் எனக்கு ஏற்பட்டுள்ளது. கடந்த காலங்களில் ஊடக அடக்குமுறைகளை அரசாங்கம் மேற்கொள்வதாக குறைகூறியவர்கள் இன்று அதே செயற்பாட்டை மேற்கொள்கின்றனர். ஆகவே இவை அனைத்திலும் மாற்றங்கள் தேவை ப்படுகின்றன. அரசாங்கம் ஜனநாயகத்தை பலப்படுத்தும் வகையில் செயற்படவேண்டும்.
கேள்வி:- ஜனாதிபதி மாளிகையின் அடியில் இருப்பது பாதுகாப்புக்காக கட்டப்பட்ட பதுங்குகுழி என முன்னாள் ஜனாதிபதி கூறுகின்றார். எனினும் அவ்வாறு பாதுகாப்புக்காக கட்டப்படவில்லை என மாற்றுக்கருத்தும் வருகின்றது. இதில் எது உண்மை?
பதில்: இதைப்பற்றி நான் அண்மையில் தெரிவித்தேன். உண்மையில் ஜனாதிபதி மாளிகையின் கீழ் இவ்வாறு ஒரு பதுங்குகுழி இருப்பதை நான் அறிந்திருக்கவில்லை. நான் இராணுவத் தளபதியாக கடமையாற்றிய காலப்பகுதியில் ஜனாதிபதி மஹிந்தவை சந்தித்த காலகட்டங்களில் இவ்வாறான ஒரு பதுங்குகுழியில் இருந்து பேச்சுவார்த்தைகளை நடத்தியதில்லை. ஆகவே யுத்த காலகட்டத்தில் இவ்வாறு ஒன்றை அமைத்ததாகக் கூறப்பட்டது எந்தளவு உண்மை என்று தெரியாது. ஆனால் அக்கால கட்டத்தில் பதுங்குகுழியில் இருந்து எந்தவித தீர்மானங்களையும் எடுக்கவில்லை என்றார்.