Breaking News

மாணவர் மீதான தாக்குதல் : இன்று மனித உரிமை ஆணைக்குழு விசாரணை

பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவிற்கு முன் ஆர்ப்பாட்டம் நடத்திய மாணவர்கள் மீதான தாக்குதல் குறித்து மனித உரிமை ஆணைக்குழுவில் தாக்கல் செய்யப்பட்ட முறைப்பாடு தொடர்பான விசாரணை, இன்று (வியாழக்கிழமை) நடைபெறவுள்ளது.

தாக்குதலுக்குள்ளான மாணவர்கள் செய்த குறித்த முறைப்பாடு மீதான விசாரணை நேற்று முன்தினம் நடைபெற்றபோதும், சம்பவத்துடன் தொடர்புடைய பொலிஸார் ஆஜராகாத நிலையில், விசாரணை இன்று வரை ஒத்திவைக்கப்பட்டது.

முதல்நாள் விசாரணையின்போது பிரதி பொலிஸ்மா அதிபர், பூஜித ஜயசுந்தர, மேல்மாகாணத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் காமினி மத்துரட்ட, கொழும்பு மத்திக்குப் பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சம்பிக்க சிறிவர்தன உள்ளிட்ட பல அதிகாரிகள் ஆஜராகியிருந்தனர்.

பல்கலைக்கழக பட்டப்படிப்பிற்கு நிகராக தமது பாடநெறியை அங்கீகரிக்குமாறு வலியுறுத்தி கடந்த ஒக்டோபர் மாதம், உயர் தேசிய கணக்கியல் டிப்ளோமா கற்கைநெறி மாணவர்கள் நடத்திய ஆர்ப்பாட்டத்தின்போது பொலிஸார் மேற்கொண்ட தாக்குதல் பாரிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.