சுமந்திரனின் கருத்தை நிராகரித்தார் கஜேந்திரகுமார்
முஸ்லீம் மக்களை இனச்சுத்திகரிப்புச் செய்யும் எண்ணம் ஒருபோதும் புலிகளிடம் இருந்ததில்லை என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.
யாழ்.ஊடக அமையத்தில் இன்று மதியம் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
வடக்கிலிருந்து முஸ்லீம் மக்கள் வெளியேற்றப்பட்ட சம்பவம் ஒரு இனச் சுத்திகரிப்பு எனக் கூறி சிலர் தமிழ் முஸ்லீம் சமூகங்களுக்கிடையில் நிரந்தர பிளவை ஏற்படுத்த சதி செய்கின்றனர். ஆனால் முஸ்லீம் மக்களை முழுமையாக இந்த மண்ணில் இருந்து அகற்றும் எண்ணம் ஒருபோதும் புலிகளிடம் இருந்ததில்லை. 2002 சமாதான உடன்படிக்கையின் பின்னர் முஸ்லீம் தலைவர்களுடன் நடைபெற்ற பேச்சுக்களின்போது வடக்கு கிழக்கு என்பது முஸ்லீம் மக்களுக்கும் உரிய தாயகம் என்பதனை குறிப்பாக தமிழ் மக்களுக்கு உள்ள சமத்துவமான உரிமை அந்த மண்மீது முஸ்லீம் மக்களுக்கும் உண்டு என்பதனை புலிகளது தலைமை வெளிப்படுத்தியிருந்தது.
2002ம் ஆண்டில் முஸ்லீம் மக்கள் வெளியேற்றப்பட்டமைக்கு பகிரங்கமான மன்னிப்புக்கோரியுள்ள புலிகள் அவர்கள் வடக்கில் வந்து மீளக் குடியமருமாறும் அழைத்திருந்தனர். என்றும் அவர் குறிப்பிட்டார்.