உள்ளகப் பொறிமுறையில் மன்னிப்பும், தண்டனையும் முக்கியம் – என்கிறார் பரணகம
மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுக்கள் தொடர்பான விசாரணைப் பொறிமுறையில் மன்னிப்பு மற்றும் தண்டனை ஆகிய இரண்டு அம்சங்களும் இடம்பெற வேண்டும் என்று காணாமல்போனோர் குறித்து விசாரிக்கும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் தலைவர் மக்ஸ்வெல் பரணகம தெரிவித்துள்ளார்.
மனித உரிமை மீறல் சம்பவங்கள் மற்றும் அனைத்துலக மனிதாபிமான சட்ட மீறல் குற்றச்சாட்டுக்கள் தொடர்பாக உள்ளக விசாரணைப் பொறிமுறை அமைய வேண்டும் என நாங்கள் பரிந்துரை செய்துள்ளோம். இந்த பரிந்துரையில் வெளிநாட்டு நீதிபதிகளின் நேரடியான பங்கேற்பை ஒருபோதும் வலியுறுத்தவில்லை. மாறாக வெளிநாட்டு பிரதிநிதிகளின் கண்காணிப்பு இருக்கவேண்டும் என்பதையே வலியுறுத்தியிருக்கிறோம்.
உள்ளக விசாரணைப் பொறிமுறையை கண்காணிக்க வரும் பிரதிநிதிகள் வெளிநாட்டு நீதிபதிகளாக இருக்கலாம். அல்லது வேறு தொழில்சார் நிபுணர்களாக இருக்கலாம். அது ஒரு விவகாரமல்ல. வெளிநாட்டு கண்காணிப்பு இருப்பது உள்ளக விசாரணைப் பொறிமுறைக்கு அனைத்துலக தரத்தில் வலுசேர்ப்பதாக அமையும். உள்ளக விசாரணை பொறிமுறையில் அனைத்துலக தொழில்நுட்ப உதவிகள் பெறப்பட வேண்டுமென்றும் நாங்கள் பரிந்துரை செய்திருக்கிறோம்.
வெளிநாட்டு அவதானிப்பாளர்கள் உள்ளக விசாரணைப் பொறிமுறையில் ஏதாவது குறைபாடுகள் இருப்பின் அதனை சுட்டிக்காட்ட முடியும். அவ்வாறு சுட்டிக்காட்டப்படும் போது அது தொடர்பில் நடவடிக்கை எடுக்கலாம். ஆனால் உள்ளக விசாரணை பொறிமுறை முற்றிலும் உள்நாட்டு பங்கேற்பில் இடம் பெறவேண்டும். இதற்காக சிறப்பு மேல் நீதிமன்றம் ஒன்று உருவாக்கப்பட வேண்டும் என்றும் நாங்கள் பரிந்துரைத்துள்ளோம்.
சட்டமா அதிபரே சட்ட விடயங்களை கையாள வேண்டுமென்றும் எமது நாட்டு நீதிபதிகள் விசாரணையாளர்கள், வழக்கறிஞர்கள், உள்ளக விசாரணையில் இடம் பெறவேண்டுமென்றும் பரிந்துரைத்திருக்கிறோம். மேலும் உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழு ஒன்று உருவாக்கப்பட வேண்டும். அந்த ஆணைக்குழு முன்பாக தவறிழைத்தோர் முன்னிலையாகி மன்னிப்பு கோர முடியும்.
அவ்வாறு மன்னிப்பு கோரும் பொழுது மன்னிப்பு வழங்குவதற்கு ஆணைக்குழுவிற்கு அதிகாரம் இருக்கும். ஆனால் இந்த உள்ளக விசாரணை பொறிமுறையானது அனைத்து விடயங்களையும் உள்ளடக்கியதாக இருக்கவேண்டும் என்பதே எமது பரிந்துரையாகும்.
குறிப்பாக மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுக்கள் தொடர்பாக மேற்கொள்ளப்படும் விசாரணை பொறிமுறையில் மன்னிப்பு, தண்டனை இரண்டு அம்சங்களும் இடம் பெறவேண்டும். எந்தவொரு தரப்பும் கொலை செய்ய வேண்டும் என்ற நோக்கில் மனித உரிமை மீறலில் ஈடுபட்டிருக்கும் என்று கூற முடியாது.
அரசாங்கம் மனிதாபிமான நடவடிக்கையை முன்னெடுத்தது. அதன் போது தனிப்பட்ட அதிகாரிகளினால் தவறுகள் இடம் பெற்றிருக்கலாம். அதேபோன்று புலிகளும் ஒரு நோக்கத்தை அடைவதற்காக போர் செய்தனர். அந்த நேரத்தில் இவ்வாறு சம்பவங்கள் மேற்கொள்ளப்பட்டிருக்கலாம்.
எனவே, இரண்டு தரப்பினரும் ஒரு நிர்ப்பந்தத்தின் அடிப்படையிலேயே செயற்பட்டிருக்கின்றனர் என்பது தெரிகிறது.அதனால் உள்ளக விசாரணை பொறிமுறையை கையாளும் நிபுணர்களும், பங்குதாரர்களும் இந்த விடயங்களை கருத்தில் கொண்டே வேலைத்திட்டங்களை முன்னெடுக்க வேண்டும்.இதனையே நாங்கள் எமது அறிக்கையில் பரிந்துரை செய்திருக்கிறோம்.” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.