Breaking News

ஐ.நா பிரேரணை தோற்கடிக்கப்பட வேண்டும்: ஜீ.எல் பீரிஸ்

இலங்கை தொடர்பில் ஐக்கிய நாடுகள் சபையினால் முன்வைக்கப்பட்டுள்ள பிரேரணை நாடாளு மன்றத்தில் நிறைவேற்றப்படாமல் தோற்கடிக் கப்படுவதற்கு அனைவரும் ஆதரவு வழங்க வேண்டும் என முன்னாள் வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல் பீரிஸ் கோரிக்கை விடுத்துள்ளார்.

கொழும்பில் நேற்று(வெள்ளிக்கிழமை) இடம்பெற்ற மாநாட்டொன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். 

இதன்போது அங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அவர், ஜெனிவா பிரேரணைக்கு இணக்கம் தெரிவித்ததன் ஊடாக இலங்கை இராணுவம் யுத்தக் குற்றங்களை இழைத்துள்ளமையை அரசாங்கம் ஏற்றுக் கொண்டுள்ளது.

இந்த பிரேரணையை நடைமுறைப்படுத்துவதற்கு நாடாளுமன்றத்தின் அனுமதி அவசியம். அந்த சட்டம் நாடாளுமன்றத்தின் ஊடாக நிறைவேற்றப்பட வேண்டும்.தென்னாபிரிக்காவை முன் உதாரணமாக கொண்டு நல்லிணக்க ஆணைக்குழுவொன்றை ஸ்தாபிக்க இந்த அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. எனினும் அவ்வாறான ஆணைக்குழுவொன்று தென்னாபிரிக்காவில் இருக்கவில்லை.

தென்னாபிரிக்க பிரச்சினைக்கும், எமது நாட்டிலுள்ள பிரச்சினைகளுக்கும் இடையில் பாரிய வேறுபாடுகள் காணப்படுகின்றது.அதனால் இந்த பிரேரணை நாடாளுமன்றத்திற்கு கொண்டு வரப்படுகின்ற சந்தர்ப்பத்தில் அரசியல் நடவடிக்கைகள், சட்ட நடவடிக்கைகள் என பல்வேறு நடைமுறைகளை பின்பற்ற வேண்டிய நிலை காணப்படுகின்றது.

இதனை நிறைவேற்றுவதற்கான பொறுப்பை அரசியல்வாதிகளிடம் கையளிக்காது, அனைத்து சமூகங்களினதும் நேரடி ஒத்துழைப்புக்கள் அவசியம். எனினும், இந்த நடைமுறையை செயற்படுத்துவதற்கு நாடாளுமன்றத்தின் அனுமதி அவசியம்.

ஜெனிவா அறிக்கையில் சர்வதேச சட்டங்களில் ஏற்றுக் கொள்ளப்படுகின்ற மிகவும் பாரிய குற்றங்கள் இலங்கை முப்படையினரால் இழைக்கப்பட்டுள்ளது என கருதப்படுவதற்கான நியாயமான காரணங்கள் அதில் உள்வாங்கப்பட்டுள்ளதாகவும் அவர் இதன்போது தெரிவித்துள்ளார்.