பழிவாங்கலில் என்னையும் கைது செய்ய திட்டம் – கம்மன்பில
பொலிஸ் தலைமையகத்தின் விசேட விசாரணை பிரிவின் ஊடாக தன்னை கைது செய்யத் திட்டமிடப்பட்டுள்ளமை தொடர்பில் தனக்கு அறியக் கிடைத்துள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
அன்னச் சின்னத்தில் போட்டியிட்ட தரப்பில் உள்ளவர்களே சுயாதீன ஆணைக்குழுவில் அதிகளவாக உள்ளதாக தெரிவித்த உதய கம்மன்பில, நிதி மோசடி தொடர்பில் குற்றஞ்சாட்டப்பட்ட சிரேஷ்ட பொலிஸ் அதிகாரியொருவரும் அதில் அங்கம் வகிப்பதாக சுட்டிக்காட்டியுள்ளார்.
இதேவேளை, கொழும்பில் பல்கலைக்கழக மாணவர்கள் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலை வன்மையாக கண்டிப்பதாக பாராளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில மேலும் குறிப்பிட்டுள்ளார்.கடந்த ஆட்சி காலத்தில் இவ்வாறான சம்பவங்கள் இடம்பெற்றிருந்தால், அது கோத்தபாய ராஜபக்ஷவின் செயற்பாடு என அவர் மீது குற்றஞ்சாட்டப்பட்டிருக்கும் எனவும் அவர் கூறியுள்ளார்.
அதேபோன்று தேசிய பொலிஸ் ஆணைக்குழு நியமிக்கப்பட்டுள்ள நிலையில், பொலிஸ் ஊடகப் பேச்சாளருக்கு புத்துயிர் கிடைத்துள்ளதாகவும் பாராளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில குறிப்பிட்டுள்ளார்.