முறைப்பாடுகளை பதிவுசெய்ய விசேட தொலைபேசிச் சேவை அறிமுகம்
யாழ்ப்பாணத்தில் அதிகரித்துள்ள போதைப் பொருள் பாவனை மற்றும் சமூகவிரோத செயல்கள் தொடர்பாக பொது மக்கள் முறைப்பாடுகளை மேற்கொள்வதற்காக விசேட தொலைபேசி சேவையை அறிமுகப்படுத்தியுள்ளதாக யாழ்.மாவட்ட அரசாங்க அதிபர் நா.வேதநாயகன் தெரிவித்துள்ளார்.
மாவட்ட செயலகத்தில் நேற்று(வெள்ளிக்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் உடனான சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.இதன்போது கருத்து தெரிவித்துள்ள அவர், அண்மைக் காலமாக யாழ்.குடாநாட்டில் அளவுக்கதிமான போதைப்பாவனைகளும் சமூகவிரோத செயல்களும் தலைதூக்கியுள்ளன.
இதனை கட்டுப்படுத்தும் முகமாக விசேட முறைப்பாட்டு செயற்பாடொன்றை ஏற்படுத்தவுள்ளதாக ஏற்கனவே தெரிவித்திருந்த நிலையிலேயே தற்போது இவ்விசேட தொலைபேசி முறைமை அறிமுகமாகியுள்ளது.
இதனூடாக போதைப் பொருள் பாவனை மற்றும் சமூக விரோத செயல்கள் மட்டுமின்றி அரச அதிகாரிகளுடைய முறைகேடுகள் தொடர்பாகவும் முறையிடமுடியும். அத்துடன் இவ்வாறு பொதுமக்களால் மேற்கொள்ளப்படும் முறைப்பாடுகள் இரகசியமான முறையில் வைத்திருக்கப்படும்.
இவை தொடர்பில் பொதுமக்கள் கவலையடையத் தேவையில்லை. பொதுமக்கள் தமது முறைப்பாடுகளை 0212225000 என்ற தொலைபேசி இலக்கத்தின் ஊடாகமேற்கொள்ளமுடியும். தற்போது இந்த முறைப்பாடுகள் அலுவலக நேரத்தில் மாத்திரமே பதிவு செய்ய முடியும்.
எதிர்வரும் ஆண்டு ஜனவரியில் இருந்து 24 மணிநேரமும் முறைப்பாடுகளை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.