புனர்வாழ்வு வேண்டாம்! விடுதலையே வேண்டும்! தமிழ்க் கைதிகள் நீதிமன்றில் தெரிவிப்பு
தமக்குப் புனர்வாழ்வு வேண்டாம் எனவும் உறுதியளிக்கப்பட்டதற்கமைய தம்மை 7ஆம் திகதிக்கு முன்னர் விடுதலை செய்ய வேண்டும் எனவும் தமிழ் அரசியல் கைதிகள் நீதிமன்றில் தெரிவித்தனர்.
கொழும்பு நீதவான் நீதிமன்றில் இன்று முற்பகல் 24 தமிழ் அரசியல்க் கட்சிகள் முன்னிலைப்படுத்தப்பட்டனர்.
இதன்போது புனர்வாழ்வு பெற விருப்புகிறீர்களா எனக் கைதிகளிடம் கேட்டபோது அதில் இரண்டு கைதிகள் மாத்திரம் புனர்வாழ்வு பெற விருப்பம் தெரிவித்தனர்.
குறித்த இரண்டு அரசியல் கைதிகளுக்கும் புனர்வாழ்வளிக்க உத்தரவிடப்பட்டது. ஏனைய 22 கைதிகள் சார்பில் நீதிபதி முன்னிலையில் கருத்து தெரிவித்த ஒருகைதி, தமக்கு புனர்வாழ்வு வேண்டாம் எனவும், வழங்கப்பட்ட வாக்குறுதிக்கமைய தம்மை 7ஆம் திகதிக்கு முன்னர் விடுதலை செய்ய வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.
எதிர்வரும் 7ஆம் திகதிக்கு முன்னர் தம்மை பொது மன்னிப்பின் கீழ் விடுதலை செய்வதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வாக்குறுதியளித்துள்ளதாகவும் இதற்கமைய தம்மை விடுவிக்க வேண்டும் எனவும் அந்தக் கைதி கேட்டுக்கொண்டார்.
அவ்வாறு 7ஆம் திகதி நள்ளிரவு 12 மணிக்கு முன்னதாக தாம் விடுவிக்கப்படாவிடின் சாகும்வரையிலான உண்ணாநிலைப் போராட்டத்தை அரசியல் கைதிகள் அனைவரும் முன்னெடுக்கப் போவதாகவும் குறித்த கைதி தெரிவித்தார்.
அவ்வாறு முன்னெடுக்கப்படும் உண்ணாநிலைப் போராட்டத்தில் தாம் உயிர்துறந்தால் அதற்கு ஜனாதிபதியும், குற்றப் புலனாய்வுப் பிரிவினரும் பொறுப்பேற்க வேண்டும் எனவும் இதற்கு இந்த நீதிமன்றமே சாட்சி எனவும் குறித்த கைதி நீதிமன்றில் பகிரங்கமாக தெரிவித்தார்.
இதனையடுத்து மீண்டும் சிறைச்சாலைக்கு அழைத்துச் செல்வதற்காக கைதிகள் அழைத்துவரப்பட்டபோது ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த ஒரு கைதி, எதிர்வரும் 7ஆம் திகதிக்கு முன்னர் அரசியல் கைதிகள் அனைவரும் விடுதலை செய்யப்படாடின் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், எம்.சுமந்திரன், செல்வம் அடைக்கலநாதன் ஆகியோர் பதவி விலக வேண்டும் எனவும் கூறினார்.
அத்துடன், 7ஆம் திகதிக்குப் பின்னர் முன்னெடுக்கப்படும் போராட்டத்தில் தாம் உயிர் துறந்தால் அதற்கு ஜனாதிபதியும், குற்றப் புலனாய்வுப் பிரிவினர், நீதிமன்றமும் பொறுப்பேற்க வேண்டும் எனவும் குறிப்பிட்டார்.