வடக்கில் மர நடுகையை ஆரம்பித்து வைத்தார் முதலமைச்சர் விக்னேஸ்வரன்
வட மாகாண விவசாய அமைச்சின் ஏற்பாட்டில் பிரகடனப்படுத்தப்பட்டுள்ள கார்த்திகை மாத மர நடுகை திட்டத்தின் முதலாவது நிகழ்வு, இன்று (ஞாயிற்றுக்கிழமை) நாவற்குழியில் வடக்கு முதல்வர் தலைமையில் இடம்பெற்றுள்ளது.
கார்த்திகை மாதம் 1ஆம் திகதி முதல் 30ஆம் திகதிவரை வட மாகாணத்தின் 5 மாவட்டங்களிலும் 5 இலட்சம் மரங்களை நடும் செயற்றிட்டமொன்றை வட மாகாண விவசாய அமைச்சு ஆரம்பித்து வைத்துள்ளது.
நாவற்குழி உப்பாட்டுக்கரை பிரதேசத்தில் இன்றையய தினம் இடம்பெற்ற முதலாவது நிகழ்வில், வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் பிரதம விருந்தினராக கலந்துகொண்டு முதலாவது மரத்தை சம்பிரதாயபூர்வமாக நட்டுவைத்தார்.
நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர்களான சிறிதரன், சரவணபவன், சித்தார்த்தன், வட மாகாண சபை உறுப்பினர்கள், மாணவர்கள் மற்றும் விவசாய திணைக்களத்தின் அதிகாரிகள் என பலர் கலந்துகொண்டனர்.