Breaking News

மாலைதீவு ஜனாதிபதி படகில் வெடிப்பு - சந்தேகநபர் இலங்கையில் கைது

கடந்த செப்டம்பர் மாதம் மாலைதீவு ஜனாதிபதியின் அதிவேகப் படகில் இடம்பெற்ற வெடிப்புச் சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தில் தேடப்பட்டு வந்த 8 பேரில் ஒருவர், நேற்று கொழும்பில் வைத்து கைதுசெய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 

மாலைதீவு துணை ஜனாதிபதியின் நெருங்கிய ஆதரவாளர் என தன்னைக் காட்டிக் கொண்டவரும் சமூக வலைத்தளங்களில் Shumba Gong என அறியப்பட்டவருமான அஹமட் அஸ்ரவ் என்பவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். 

இவர் கைது செய்யப்படுவதற்கு சில நிமிடங்களுக்கு முன்னர், தனது ட்விட்டர் சமூக வலைத்தளத்தில், "சிலர் எனது அறைக்கதவை உடைத்துக் கொண்டு வர முயற்சிக்கின்றனர். அல்லா எம்மை காப்பாற்றக் கூடும்” என பதிவிட்டுள்ளார். 

இதேவேளை பொலிஸார் அவர் கைதுசெய்யப்பட்டதை உறுதிசெய்துள்ள போதிலும், எப்போது சந்தேகநபர் மாலைதீவிற்கு நாடு கடத்தப்படுவார் என்பது தொடர்பான எந்தத் தகவலையும் தெரிவிக்கவில்லை. 

இதேவேளை அண்மையில் இடம்பெற்ற ஊடகவிலயாளர் சந்திப்பொன்றில் மாலைதீவின் உள்விவகார அமைச்சர் உமர் நசீர் "நான் அவர்களை (சந்தேகநபர்களை) தானாக வந்து விசாரணைகளுக்கு ஒத்துழைக்குமாறு வலியுறுத்துகிறேன். அல்லது சர்வதேச பொலிஸாரின் உதவியுடன் அவர்கள் அழைத்துவரப்படுவார்கள் எனக் குறிப்பிட்டார். 

மேலும் அண்டை நாடுகளான தாய்லாந்து மற்றும் இலங்கை உள்ளிட்ட நாடுகளில் சந்தேகநபர்கள் மறைந்திருக்கலாம் எனவும் அவர் கூறியுள்ளார். 

இதேவேளை இந்த விடயம் தொடர்பில் அண்மையில் அந்த நாட்டு துனை ஜனாதிபதி கைதுசெய்யப்பட்டார். 

இதன்படி தற்போது கைதான அஸ்ரவ் தவிர்த்து முஹமட் அலாம் லதீப், முஹமட் குசைன், முஹமட் விஷாம், முஹமட் அசீல் அஹமட், ஹூசைன் சினன் (Hussein Sinan), மற்றும் அஹமட் அலி (Ahmed Ishfah Ali) ஆகியோரும் சந்தேகநபர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.