கொழும்பு துறைமுக நகரத் திட்டம் மீளாய்வு – சீனாவுக்கான நிலஉரிமை பறிப்பு
கொழும்புத் துறைமுக நகரம் தொடர்பாக சீனாவுடன் செய்து கொள்ளப்பட்ட உடன்பாடு மீளாய்வு செய்யப்படும் என்றும், அதில் 20 ஹெக்ரெயர் நிலத்தை சீன நிறுவனத்துக்கு வழங்குவது உள்ளிட்ட பல உட்பிரிவுகள் நீக்கப்படும் என்றும் இலங்கை அரசாங்கம் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக இலங்கையின் அனைத்துலக வர்த்தக இராஜாங்க அமைச்சர் சுஜீவ சேனசிங்க தகவல் வெளியிடுகையில்,“மீளாய்வு செய்யப்பட்ட உடன்பாட்டுக்கு அமையவே இந்த திட்டம் நடைமுறைப்படுத்தப்படும்.
சீன நிறுவனத்துக்கு 20 ஹெக்ரெயர் நிலத்தை உரிமையாக வழங்கும் உட்பிரிவு நீக்கப்படும். அத்துடன் சீன நீர்மூழ்கிகள் அனுமதியின்றி நுழைவதற்கு அனுமதிக்கப்படாது.மீளாய்வு உடன்பாட்டு விதிகளுக்கமைய, விமானம் பறக்கக் கூடாத வான்பரப்பு நடைமுறையில் இருக்காது.
முன்னைய அரசாங்கத்தினால் செய்து கொள்ளப்பட்ட இந்த உடன்பாடுகளை ரத்துச் செய்ய முடியாது. ஆனால், இலங்கைக்கு ஆபத்தை ஏற்படுத்தக் கூடிய அனைத்து உட்பிரிவுகளும் மீளாய்வு செய்யப்படும்.எமது நாட்டுக்கு ஆக்கபூர்வமாகவும், நன்மையளிக்கக் கூடிய வகையிலும் இந்த திட்டம், முன்னெடுக்கப்படும்.மீளாய்வு செய்யப்பட்ட பின்னர், சாதாரண வர்த்தக உடன்பாட்டுக்கு மேலான எதையும், இந்த உடன்பாடு கொண்டிக்காது.அடுத்த ஆண்டு துவக்கத்தில், கொழும்பு துறைமுக நகர கட்டுமானப் பணிகள் மீள ஆரம்பிக்கப்படும்.” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
சீனாவின் தொடர்பாடல் கட்டுமான நிறுவனத்தின் 1.5 பில்லியன் முதலீட்டில், 270 ஹெக்ரெயர் பரப்பளவில் கொழும்புத் துறைமுக நகரை நிர்மாணிக்க மகிந்த ராஜபக்ச அரசாங்கம் சீனாவுடன் உடன்பாட்டில் கையெழுழுத்திட்டிருந்தது.
இந்த திட்டத்தை இலங்கையின் தற்போதைய அரசாங்கம், கடந்த மார்ச் மாதத்தில் இருந்து இடைநிறுத்தி வைத்திருப்பது குறிப்பிடத்தக்கது.