“யுத்த போர்வையில் குற்றம் இழைத்தோருக்கு தண்டனை”
பயங்கரவாதத்திற்குள் மறைந்து கொண்டு கொலைகளை செய்த, ஆட்களை கடத் தியவர்களுக்கு தண்டனை வழங்கப்பட வேண்டும். எனவே உண்மையைக்கண்டறிய வேண்டியது அவசியமாகும்.
இதன் மூலம் பயங்கரவாதத்திற்கு எதிராக அர்ப்பணிப்பு செய்த படையினரின் கௌரவத்தை பாதுகாக்க முடியும் என்று அமைச்சர் சம்பிக ரணவக்க தெரிவித்தார். உண்மையை கண்டறிவது நாட்டை காட்டிக் கொடுப்பதென்பது பொய்யான தேசப்பற்றாளர்களின் விதண்டாவாதமாகும் என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.
இது தொடர்பாக அமைச்சர் சம்பிக்க ரணவக மேலும் தெரிவித்திருப்பதாவது;
உண்மையை கண்டறிய வேண்டியது அவசியமாகும். நாட்டில் இடம்பெற்ற பல்வேறு சம்பவங்கள் தொடர்பாக இன்னமும் உண்மைகள் வெளிவரவில்லை. லலித்தை கொன்றது புலிகளா? பிரேமதாஸவா? பிரேமதாஸவை கொலை செய்தது புலிகளா? சொத்தி உபாலியா? என்பது எமக்கு தெரியாது.
அதேபோன்று மூதூரில் 17 பேர் கொலை செய்யப்பட்டது மற்றும் தமிழ் எம்.பி. க்களை கொலை செய்தது யாரென்பது தெரியாது? இதுவரைக் காலமும் இக் கேள்விகளுக்கு பதில் கிடைக்கவில்லை.
எனவே இவை தொடர்பில் உண்மையை கண்டறிவது நல்ல விடயம் தானே?எனவே உண்மையை கண்டறிவதற்கு தேசிய வேலைத் திட்டமொன்று அவசியமாகும்.நாம் படையினரையும் நாட்டையும் காட்டிக் கொடுப்பதாக இதனை அர்த்தப்படுத்த முடியாது. விசாரணைகளின் பின்னரே இது தொடர்பான தீர்மானத்திற்கு வர முடியும். எக்னெலிகொடவை கொலை செய்தது நான் என்ற ஒரு குற்றச்சாட்டு காணப்பட்டது.
ஆனால் இன்று இதனைச் செய்தது யார்? எவரது தேவைக்காக இது மேற்கொள்ளப்பட்டது என்பது தற்போது வெளிவந்து கொண்டிருக்கின்றது.எனவே உண்மையை கண்டறிவதன் மூலம் இவ்வாறான பொய்களை கூறியவர்களின் பின்புலம் வெளியே வரும்.இன்று தம்மை தேசப்பற்றாளர்களாக மார்தட்டிக் கொண்டு கூச்சலிடுவோர் அன்று ஹபரனைக்கு அப்பால் போகவில்லை. நாம் உயிரை மதிக்காது நாட்டுக்காக செயற்பட்டோம். மஹிந்த ராஜபக் ஷவிற்கு நாம் கட்டுப்பட்டிருந்தால் ‘‘மாவிலாறிலிருந்து" யுத்தம் ஆரம்பித்திருக்கமாட்டாது. இன்றைய வீரர்கள் அன்று இருக்கவில்லை.
சந்திரிகாவுக்கு 2000 ஆம் ஆண்டில் தினேஷ் போன்றவர்கள் கட்டுப்பட்டனர். அதேபோன்று நாமும் கட்டுப்பட்டிருந்தால் ‘சுனாமிக்கு பின்னரான இடைக்கால அதிகாரம்' புலிகளுக்கு வழங்கப்பட்டிருக்கும் என்றார்.