நடந்தவற்றை எண்ணி வடக்கு, கிழக்கு மக்கள் சோர்ந்து விடாது மன வலிமையுடன் இருக்க வேண்டும்
நடந்தவற்றை எண்ணி வடக்கு, கிழக்கு மக்கள் சேர்ந்து இருக்காது மனவலிமையுடன் இருக்கவேண்டும் என வட மாகாண முதலமைச்சர் சி.வி விக்கினேஸ்வரன் தெரிவித்தார்.
வட மாகாண தடகள விளையாட்டு விழாவை சனிக்கிழமை வவுனியா தேசிய கல்வியியல் கல்லூரி மைதானத்தில் ஆரம்பித்து வைத்து உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அங்கு அவர் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில்,
வடக்கு, கிழக்கு தமிழ் மக்கள் தமக்கு நடந்த துன்பியல் சம்பவங்களில் மனம் லயித்து வாட்டத்தில் பொழுதை கழிக்காமல் சிறந்த மன வலிமையையும் உடல் வலிமையையும் பெற நாங்கள் ஆவன செய்ய வேண்டும்.
இன்று விளையாட்டு வீரர்கள் நவீன முறையிலான விளையாட்டு யுக்தியை கற்றுக்கொண்டு விளையாட்டில் தேர்ச்சி பெறுவதற்கு உபகரண பற்றாக்குறை என்பது பெரும் குறையாகவே உள்ளது. நான் அண்மையில் மன்னாரில் திறந்து வைத்த விளையாட்டு அரங்கு எந்தளவிற்கு பயனுள்ளதாக அமையும் என்பதனை நானறியேன். எனினும் அதனை திறந்த காற்றோட்டமுள்ள இடமாக மாற்றி மாணவ மாணவிகள் பயன்பெற நாங்கள் ஆவன செய்யவேண்டும்.
அத்துடன் ஒவ்வொரு மாவட்டத்திலும் நல்ல விளையாட்டு அரங்குகள் கட்டப்பட்டு விளையாட்டு வீரர்களுக்கு போதிய பயிற்சி அளிக்கப்படவேண்டும்.
வடக்கு மாகாணசபையின் விளையாட்டுத் திணைக்களத்தினால் வருடா வருடம் முன்னெடுக்கப்படுகின்ற விளையாட்டுப் போட்டிகள் இம்முறை வவுனியா மாவட்டத்தில் வவுனியா நகரசபை விளையாட்டு மைதானத்தில் நடைபெற இருந்த போதும் கடும் மழை வெள்ளம் காரணமாக இந் நிகழ்வுகள் வவுனியா கல்வியியற் கல்லூரி விளையாட்டு மைதானத்திற்கு மாற்றப்பட்டு நிகழ்வுகள் ஆரம்பிக்கப்பட்டுள்ள இத் தருணத்தில் உங்கள் முன் ஓரிருவார்த்தைகள் பேசுவதில் மகிழ்வடைகின்றேன்.
வடக்கு மாகாணத்தின் ஐந்து மாவட்டங்களிலும் தனித்தனியாக இந்த தடகளப் போட்டிகள் ஆரம்பத்தில் நடத்தப்பட்டு அதில் வெற்றி பெற்ற வீர வீராங்கனைகளுக்கிடையேயான போட்டியாக இன்றைய போட்டி மாகாண மட்டத்தில் அமைந்துள்ளது.
இதில் வெற்றி பெறுகின்ற வீர, வீராங்கனைகள் தேசிய மட்ட விளையாட்டுப் போட்டிகளில் பங்கு பற்றுவதற்கு வாய்ப்பளிக்கப்படுவர்.இந்த வகையில் இன்று வெற்றி வாகை சூட இருக்கின்ற வீர வீராங்கனைகளுக்குமுதற்கண் எனது பாராட்டுக்களைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.
மாவட்ட மட்டத்தில் வெற்றி பெற்ற விளையாட்டு வீர, வீராங்கனைகளப் பாராட்டுவதற்கும் அவர்களை உற்சாகப்படுத்துவதற்குமாக அவர்களின் வர்ண புகைப்படங்களைத் தாங்கிய விசேட மலரொன்றும் இங்கே வெளியிட்டு வைக்கப்பட்டுள்ளது. இம் மலர் வெளியீடானது வெற்றி பெற்ற வீரர்களை கௌரவிப்பதுடன் இப்போட்டிகளில் கலந்துகொண்ட வீர, வீராங்கனைகளை எதிர்வரும் போட்டிகளில் இன்னும் முனைப்புடன் செயற்பட்டு பல பரிசில்களைப் பெற்றுக் கொள்ள ஒரு உந்துசக்தியாக அமையுமென்பதில் ஐயமில்லை.
மாணவர்கள் புத்தகக் கல்வியுடன் மட்டும் நின்றுவிடாது இணை பாடவிதான செயற்பாடுகளிலும் ஈடுபட்டுத் தமது திறமைகளை வெளிக்கொணர்வதற்கு ஏதுவாக இவ்வாறான விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்படுகின்றன. வடபுல மாணவர்கள் விளையாட்டிலும் மிகத் திறமையானவர்கள் என்பதனைக் கடந்த சிலவருடங்களில் நிரூபித்துக் காட்டியுள்ளார்கள்.
எங்கள் மாணவ, மாணவியர்கள் எவருக்கும் சளைத்தவர்கள் அல்ல. அவர்களுக்கான அனுசரணைகளையும் உதவிகளையும் ஊக்குவிப்பையும் வழங்கினால் அவர்கள் நாட்டில் முதல் இடத்தைப் பெறக் கூடியவர்கள் என்பதில் எனக்கு எந்தவித சந்தேகமுமில்லை. மாணவர்கள் நன்றாக ஓடிக் களைத்து விளையாட்டுக்களில் ஈடுபடுகின்ற போது அவர்களின் உடலிலும் உள்ளத்திலும் ஒருபுத்துணர்ச்சியும் உத்வேகமும் ஏற்படுகின்றது. உண்மையில் அவ்வாறான உத்வேகம் அவர்களைக் கல்வியிலும் மேம்படச் செய்கின்றது.
இன்று பல பிள்ளைகள் கல்வியில் சிறப்பாகச் செயற்படுகின்றபோதும் விளையாட்டுக்களில் அவர்கள் ஈடுபடுவதில்லை. அதற்குப் பெற்றோரும் ஒருகாரணமாகின்றனர். தம்பி படிபடி என்று கல்விகற்பித்தலில் மட்டுமே கண்ணாக இருக்கின்றார்கள். தமது பிள்ளைகளின் உடல் விருத்திக்கும் மூளை வளர்ச்சிக்கும் விளையாட்டுக்கள் அவசியம் என்பதை எண்ண மறந்துவிடுகின்றார்கள். எம் குழந்தைகளின், பிள்ளைகளின் உடலும் உள்ளமும் அறிவும் ஒருங்கே வளரவும் விருத்தியடையவும் நாம் அவற்றிற்கான நடவடிக்கைகளையும் எடுக்கவேண்டும்.
விளையாட்டுக்கள் ஒருமனிதனுக்கு ஆரோக்கியமான உடல்வலுவை வழங்குகின்றது. விளையாட்டுக்களிலும் தொடர் பயிற்சிகளிலும் ஈடுபடுகின்றவர்கள் சிறந்தஆரோக்கியத்தைக் கொண்டிருக்கின்றார்கள். ஏனையவர்கள் சிறுவயதிலேயே பல வருத்தங்களினால் உபாதைப்படுகின்றார்கள். எனவே விளையாட்டுக்களும், உடற்பயிற்சிகளும் எல்லா வயதினருக்கும் எல்லா சந்தர்ப்பத்திலும் அத்தியாவசியமானவை.சிறந்த தேக ஆரோக்கியத்துடன் இருப்பதால் நீண்டகாலம் சுகதேகிகளாக வாழ முடியும். ஆகவே, இன்று போட்டிகளில் ஈடுபடும் மாணவ மாணவியர் மட்டுமல்லாமல் எமது சகல மாணவ சமுதாயமும் உடலை ஆரோக்கியமாக வைத்திருக்க உரிய நடவடிக்கைகள் எடுக்கவேண்டும்.
நான் 1987ஆம் ஆண்டில் சீனாவின் தலைநகர் பீஜிங் சென்றேன். அங்கிருந்த இரு வாரங்கள் என்னை ஈர்த்த காட்சி தினமும் அதிகாலையில் கடும் குளிரில் எவ்வாறு அந்நாட்டு இளைஞர், யுவதிகள், வயதுவந்தோர் அனைவரும் தேகப்பியாசங்களில் ஈடுபடுகின்றார்கள் என்பதே. தாய்ச்சி என்ற மிகவும் கட்டுப்பாடான மெதுவாக உடலை நகர்த்தும் பயிற்சிகளில் அனைவரும் கிடைத்த இடங்களிலெல்லாம் ஈடுபட்டிருந்தமை கண்டு வியந்தேன். காலையில் கடும் குளிரில் இப்பேர்ப்பட்ட பயிற்சிகளில் ஈடுபட்டால் உடல் சுறுசுறுப்பாக முழு நாளும் வேலை செய்யும் என்று எனது சீன நண்பர் ஒருவர் அப்போது கருத்துத் தெரிவித்தார்.
பொதுவாக ஐம்பது வயதுக்கு மேற்பட்டவர்கள் கட்டாயமாகத் தாய்ச்சி அப்பியாசங்களில் ஈடுபட்டு வருவதாக அறிவித்தார். மன அழுத்தம், உடல் அழுத்தம் ஆகியவற்றைப் போக்க மெதுவாக மூச்செடுப்பதுடன் மெதுவாக உடலை சில அசைவுகளிலும் நகர்வுகளிலும் ஈடுபடுத்துவதே தாய்ச்சியாகும். சீனர்கள் இப்பேர்ப்பட்ட உடல் அசைவுகளுக்கும் அப்பியாசங்களுக்கும் எவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கின்றார்கள் என்பதை நான் அறிந்து கொண்டேன். சில மேற்கு நாடுகளில் காலையில் கூட்டாகப் பல ஆயிரம் பேர்கள் பலமைல் தூரம் சைக்கிள் சவாரி செய்யும் காட்சியையும் கண்டுள்ளேன். அந்தந்த நாடுகள் எவ்வாறு உடல் பயிற்சிக்கு முக்கியத்துவம் கொடுத்து வருகின்றார்கள் என்பதை அறிந்து கொண்டேன்.
போரின் போது பலவித மன அழுத்தங்களுக்கு ஆளான எமது வடமாகாண மக்கள் இனித் தம்மை அந்த அழுத்தங்களில் இருந்து விடுபடச் செய்யக் கற்றுக் கொள்ளவேண்டும். அதற்குப் பிராணாயாமம், யோகப்பியாசம், உடல் பயிற்சிகள், நீந்துதல், சைக்கிள் ஓடுதல் போன்ற பலதும் உறுதுணையாக இருப்பன என்பதை நாம் மறக்கக் கூடாது. எமக்கேற்றவாறு பயிற்சிகளில் ஈடுபட நாங்கள் முன்வரவேண்டும். வடக்கு, கிழக்கு மாகாண தமிழ் மக்கள் தஎமக்கு நடந்த துன்பியல் நடவடிக்கைகளில் மனம் இலயித்து வாட்டத்தில் பொழுதைக் கழிக்காமல் சிறந்தமன நிலையினையும் உடல் வலுவையும் பெற நாங்கள் ஆவன செய்யவேண்டும் என்று சொல்லிவைக்கின்றேன்.
அடுத்து இன்னொரு விடயத்தைக் கூற விரும்புகின்றேன். இன்று விளையாட்டு வீரர்கள் நவீன முறை விளையாட்டு யுக்திகளைக் கற்றுக் கொண்டு விளையாட்டுக்களில் தேர்ச்சி பெறுவதற்கும் முன்னணி வகிப்பதற்கும் உபகரண பற்றாக்குறை ஒரு பெருங் குறையாக உள்ளது.
கரப்பந்தாட்டங்களை மூடிய அறைகளில் Indoor Games ஆக நடத்துவதற்குரிய Indoor Playground Facilities இல்லாமை ஒரு பெருங் குறையாகும். எந்த அளவுக்கு நான் அண்மையில் மன்னாரில் திறந்து வைத்த விளையாட்டரங்கம் பயனுடைத்து என்பதை நான் அறியேன். அதனைக் காற்றோட்டம் மிக்கதாக ஆக்கி உரிய நன்மைகளை மாணவமாணவியர் பெற நாம் ஆவன செய்யவேண்டும். அத்துடன் ஒவ்வொரு மாவட்டத்திலும் நல்ல விளையாட்டரங்கங்கள் கட்டப்பட்டு விளையாட்டு வீரர்களுக்குப் போதிய பயிற்சி அளிக்கப்படவேண்டும்.
அதுபோல உயரம் பாய்தல்,கோலூன்றிப் பாய்தல் போன்ற விளையாட்டுக்களை விளையாடுவதற்குரிய Mat போன்ற உபகரணங்கள் இன்மையால் விசேட பயிற்சிகளைப் பெறமுடியாதுள்ளது என்பதையும் நான் அறிவேன். மாணவ மாணவியர்க்கான நவீன விளையாட்டு உபகரணங்களையும் வசதிகளையும் பெற்றுக் கொடுக்கவேண்டிய பொறுப்பு எமது விளையாட்டுத் திணைக்களத்திற்குரியதாகும். சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இது விடயத்தில் போதிய கரிசனை எடுத்து எமது மாணவ சமுதாயத்தின் விளையாட்டுத் திறனை மேம்படச் செய்ய சகல நடவடிக்கைகளும் எடுக்கவேண்டும்.