Breaking News

மீண்டும் உண்ணாவிரத போராட்டத்தில் குதித்துள்ள மட்டு.தமிழ் அரசியல் கைதிகள்

தமக்கு பொதுமன்னிப்பு வழங்கி விடுதலை செய்யுமாறு வலியுறுத்தி, மட்டக்களப்பு சிறைச்சாலையிலுள்ள தமிழ் அரசியல் கைதிகள் 10 பேர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

அரசாங்கம் வழங்கிய வாக்குறுதிகள் நிறைவேற்றப்படாத நிலையில், குறித்த கைதிகள் இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை முதல் மீண்டும் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ளனர்.

உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள கைதிகளை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் வியாளேந்திரன் நேரில் சென்று பார்வையிட்டுள்ளார்.இதன்போது, ஏற்கனவே தங்களுக்கு வழங்கப்பட்ட வாக்குறுதிகளுக்கு அமைய அரசாங்கம் அரசியல் கைதிகள் அனைவரையும் விடுதலை செய்ய தவறியுள்ளதாகவும், தற்போது அரசாங்கத்தினால் விடுதலை செய்யப்படவுள்ள 30 பேரும் அன்மைக்காலங்களில் கைதுசெய்யப்பட்டவர்கள் என்றும் தம்மிடம் குறிப்பிட்டதாக தெரிவித்தார்.

அத்துடன், பிணை வழங்குவதற்கு தெரிவுசெய்யப்பட்டவர்கள் அரசியல் கைதிகள் அல்லர் எனவும் குறிப்பிட்டுள்ளதாக வியாளேந்திரன் கூறியுள்ளார். இந்நிலையில், அரசாங்கம் வழங்கிய வாக்குறுதியின் பிரகாரம், தம்மை விடுதலை செய்யாவிட்டால் சாகும்வரை உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக தமிழ் அரசியல் கைதிகள் தெரிவித்துள்ளனர்.