யாழ்ப்பாணத்தில் 2015இல் எச்ஐவி தொற்று அதிகரிப்பு – மருத்துவ அதிகாரி தகவல்
கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில், யாழ்ப்பாண மாவட்டத்தில் எச்ஐவி தொற்றுக்கு உள்ளானவர்கள் இந்த ஆண்டில் அதிகளவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக, தேசிய எஸ்ரிடி/எயிட்ஸ் கட்டுப்பாட்டுத் திட்ட பணிப்பாளர், மருத்துவ கலாநிதி சிசிர லியனகே தெரிவித்துள்ளார்.
“யாழ்ப்பாணத்தில் தற்போது, 56 பேர் எச்ஐவி தொற்றுடன் வாழ்கின்றனர். யாழ்ப்பாணத்தில் எச்ஐவி பரிசோதனைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளமைக்கு இது முக்கியமான காரணம்
கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில், யாழ்ப்பாண மாவட்டத்தில் இந்த ஆண்டில் அதிகளவு எச்ஐவி தொற்றுக்கு உள்ளானவர்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர்.2015 ஆண்டு செப்ரெம்பர் மாதத்தில் மட்டும் சிறிலங்காவில் எச்ஐவியினால் பாதிக்கப்பட்ட 170 பேர் புதிதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர்.
இலங்கையில் 1987ஆம் ஆண்டு எயிட்ஸ் நோய் முதல்முதலாக கண்டுபிடிக்கப்பட்டது. இதற்குப் பின்னர், எயிட்ஸ் நோயினால், 357 பேர் மரணமாகியுள்ளனர்.2013ஆம் ஆண்டு, மட்டும் எயிட்ஸ் நோயினால் 93 பேர் மரணமாகினர்.” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
அதேவேளை, இலங்கையில் 3600இற்கு மேற்பட்டோர், எச்ஐவியினால் பாதிக்கப்பட்டுள்ளதாக, எச்ஐவி/எயிட்ஸ் தொடர்பான, தேசிய எஸ்ரிடி/எயிட்ஸ் கட்டுப்பாட்டுத் திட்டத்தின், 2014-2015 ஆய்வு தெரிவிக்கிறது.
இவர்களில் பெரும்பாலானோர் 15 வயதுக்கும், 49 வயதுக்கும் இடைப்பட்டவர்களாவர். இவர்களில் பெரும்பாலானவர்கள், (69 வீதம்) ஆண்களாவர்.2014ஆம் ஆண்டில் எச்ஐ வி பாதிப்பு தாய் மூலம் குழந்தைக்குப் பரவிய ஒரு சம்பவமும் பதிவாகியுள்ளது.
இலங்கையிலேயே மேல் மாகாணம் தான் அதிகளவில் எச்ஐவி பாதிப்புக்கு உள்ளாகியுள்ளது. எச்ஐவி தொற்றுக்கு உள்ளானவர்களில் 56 வீதமானோர் மேல் மாகாணத்திலேயே வாழ்கின்றனர்.ஏனைய மாகாணங்களில், 10 வீதத்துக்கும் குறைவானோரே இத்தகைய பாதிப்புடன் உள்ளனர்.
மாவட்ட ரீதியாக, கொழும்பு, கம்பகா, புத்தளம் ஆகிய மாவட்டங்களில், எச்ஐவி பாதிப்பு அதிகம் உள்ளதாகவும் தேசிய எஸ்ரிடி/எயிட்ஸ் கட்டுப்பாட்டுத் திட்டத்தின் ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.