திலக் மாரப்பனவை பதவி நீக்கம் செய்யுமாறு கோரி பிரதமருக்கு கடிதம்
சட்ட ஒழுங்கு மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சர் திலக் மாரப்பனவை பதவி நீக்கம் செய்யுமாறு கோரி பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு 6 பேர் அடங்கிய குழுவொன்று கடிதமொன்றை அனுப்பிவைத்துள்ளது.
இந்த கடிதத்தில் வழக்கறிஞர்கள்.நெவில் ஆனந்த, சுஜீவ தஹநாயக்க,.கிஹான் பெரேரா, சமூக சேவையாளர் முதித கரணாமுதி, ஊடகவியலாளர். குசல் பெரேரா,தொழிற்சங்கத் தலைவர் என்டன் மார்க்ஸ் ஆகியோர் கையொப்பமிட்டுள்ளனர்.
இந்த கடிதத்தில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,
மிதக்கும் ஆயுத கப்பலும் சட்டவிரோதமான ஆயுத விற்பனை நிறுவனமுமான எவன் கார்ட் நிறுவனத்தின் தவைரான நிஷ்சங்க சேனாபதியினுடைய சட்ட ஆலோசகராவிருந்த திலக் மாரப்பன தற்போது சிறைச்சாலைகள் அமைச்சராக தெரிவு செய்யபட்டுள்ளமைக்கு எமது கடுமையான எதிர்ப்பை வெளியிடுகின்றோம்.
60 மாதங்களில் புதிய நாடொன்றை உருவாக்கும் ஐந்து அம்ச திட்டத்தை நடைமுறைப்படுத்தி மஹிந்த ராஜபக்ஷவின் ஏகாதிபத்தியமான குடும்ப ஆட்சியில் போன்று இல்லாது ஜனநாயக ஆட்சியை கட்டியெழுப்புவீர்கள் என்ற நம்பிக்கையிலேயே மக்கள் உங்களுக்கு வாக்களித்தனர்.அதற்கு மாறாக செயற்படுவதை எம்மால் ஏற்றுக்கொள்ள முடியாது.
எவன் கார்ட் நிறுவனத்தின் தலைவர் கடந்த காலங்களில் ராஜபக்ஷ குடும்பத்துடன் கிட்டிய உறவை பேணியவர் என்பது தற்போது வெளிப்படையாகியுள்ளது.அதேவேளை வழக்கறிஞர் வசந்த நவரத்ன பண்டாரவின் குறித்த நிறுவனம் தொடர்பிலான அறிக்கையில் நிஷங்க, கோத்தபாய ராஜபக்ஷ உள்ளிட்ட அறுவர் மீது வழக்கு தொடுப்பதற்கான காரணிகள் குறிப்பிடப்பட்டுள்ளன.
இதன் காரணமாகவே ஜனாதிபதி ஆணைக்குழுவை நிறுவி அதனூடாக விசாரணைகளை மேற்கொள்ள வேண்டிய கட்டாய நிலைக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஆளாகினார்.இந்நிலையில் இது தொடர்பில் முழுமையாக அறிந்திடாத திலக் மாரப்பனவை நல்லாட்சி அரசாங்கம் ஏன் பதவியில் அமர்த்தியது என்பது எமக்கு கேள்விக்குறியாகவே உள்ளது.
இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் அமைச்சர் திலக்மாரப்பன தமது தோழரான எவன்கார்ட் நிறுவன தலைவர் நிஷங்கவை பாதுகாக்கும் வகையில் பாராளுமன்றத்தில் ஆற்றிய உரையினை தொடர்ந்து நல்லாட்சி அரசாங்கம் எவன்கார்ட் நிறுவனம் தொடர்பிலான தகவல்களை மறைக்கத் தொடங்கியுள்ளது. அதனால் தேர்தல் காலத்தில் மக்கள் விடுத்த கோரிக்கைகளுக்கு முரனாகவே நல்லாட்சி அரசாங்கம் செயற்படுகின்றது என்பது உறுதியாகியுள்ளது.
எனவே மீண்டும் ஒருமுறை மஹிந்த ராஜபக்ஷவின் ஏகாதிபத்திய ஆட்சி நாட்டில் உருவாவதை தடுப்பதற்காக அமைச்சர் திலக் மாரப்பனவை பதவி நீக்க வேண்டியது அவசியம்.